பசும்பொன்னில் பேனர் கிழிக்கப்பதற்காக டிடிவி தினகரன் மற்றும் 100 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்கனார் நினைவிடத்தில் அஞ்சலி மற்றும் மரியாதை செலுத்துவதற்காக வந்த ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இருவரையும் வரவேற்று நூற்றுக்கணக்கான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. 

குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட மணிகண்டன் மற்றும் ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் நினைவிடத்திற்குச் செல்லும் வழியில் கிலோ மீட்டர் கணக்கில் சாலையின் இருபுறமும் பிரம்மாண்ட பேனர்கள் வைத்திருந்தனர். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதே நேரத்தில் டி.டி.வி. தினகரனும் அஞ்சலி செலுத்துவதற்கு காவல் துறையிடம் அனுமதி கேட்டதாகத் தெரிகிறது. ஆனால் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வருவதால் அப்போது அனுமதி மறுக்கப்பட்டது. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.ஐத்தொடர்ந்து மு.க.ஸ்டாலினும் படைபரிவாரங்களோடு வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார். அஞ்சலி நிகழ்ச்சிக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் என புரொட்டோ கால் பிரகாரம் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களைத் தொடர்ந்து அ.ம.மு.க.வைச்சேர்ந்த தினகரன் கட்சியினர் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டது. 

டி.டி.வி.தினகரனோடு ஆயிரக்கணக்கில் வந்த அவரது தொண்டர் படையினர் மற்றும் ஆதரவாளர்கள் கையில் கொண்டுவந்திருந்த இரும்பு கொடிக்கம்பங்கள் மற்றும் இரும்புக் கம்பிகளை வைத்து பேனர்களை ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். பேனர்களை டார் டாராகக்கிழித்தனர். இந்த வீடியோ காட்சிகள் தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் பரவி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்தக் காட்சிகளை வீடியோவில் பார்த்த மாவட்டக் காவல்துறையினரும் அ.தி.மு.க.வினரும் அதிர்ச்சி அடைந்து மேலிடத்தில் புகார் செய்தனர். இதனடிப்படையில் தீர விசாரித்ததில் டி.டி.வி. தினகரன் ஆட்கள்தான் பேனர்களைக் கிழித்தனர் என்ற முடிவுக்கு வந்த பிறகு ராமநாதபுரம் மாவட்ட செயலாளரான முனியசாமி தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கமுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

அதிமுகவினரின் இந்த புகாரையடுத்து, டிடிவி தினகரன் மற்றும் நூற்றுக்கணக்கானோர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கமுதி காவல் நிலையத்திற்கு விரைவில் டிடிவி தினகரன் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.