தேர்தல் பிரச்சாரத்தின் போது டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்ய விடாமல் இடையூறு செய்ததாக புதிய தமிழகம் கட்சி தலைவரும் தென்காசி தொகுதி மக்களவை வேட்பாளருமான கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவகத்தில்  கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர்,  நடைப்பெறவுள்ள 4 தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுகவிற்கு ஆதரவு. 40 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். பொன்பரப்பி, பொன்னமராவதி பிரச்சனைகளுக்கு  யார் காரணமோ அவர்களை கண்டறிந்து காவல்துறை தண்டிக்க வேண்டும்.

தென்காசியில் நாடாளுமன்றம் தேர்தல் பிரச்சாரத்தில் எங்கள் கூட்டணி கட்சியினர் ஈடுபட்டிருந்தபோது டி.டி.வி.தினகரன் கட்சியினர் பரிசு பெட்டியை காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர் . அக்கட்சியை சேர்ந்த சில இளைஞர்கள் 4 கிராமங்களில் எங்களை வாக்க சேகரிக்க கூட கிராமத்திற்குள் விடவில்லை. 

டிடிவி தினகரனை அவர்களை கண்டிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். தேவேந்திர குல வேளாளர் பிரிவை பட்டியலில் இருந்து நீக்குவது குறித்த அரசாணையை முதல்வர் விரைவில் அறிவிப்பார். தற்போது தேர்தல் விதிமுறைகள் இருப்பதால் தாமதம் ஆகிறது’’ என அவர் தெரிவித்தார்.