திடீரென செந்தில் பாலாஜியை குறி வைத்து மத்திய குற்றப் பிரிவு போலீசார் களம் இறங்கியதன் பின்னணியில் பகிர் பிளான் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி. அப்போது போக்குவரத்து துறையில் டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் எடுப்பதாக கூறி செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் பலரிடம் பணம் வசூலித்ததாக அப்போதே கூறப்பட்டது. இதில் கணிசமானவர்களுக்கு பணிகள் கொடுக்கப்பட்ட நிலையில், பலருக்கு வேலை கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட நிலையில், தங்களிடம் பணம் வாங்கி செந்தில்பாலாஜி ஏமாற்றிவிட்டதாக கூறி நீதிமன்றத்தை நாடினர்.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆண்டுகள் கடந்த நிலையில், திடீரென நேற்று அதிகாலை முதல் செந்தில் பாலாஜி தொடர்புடைய வீடுகளில் போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். சென்னை, கரூரில் செந்தில் பாலாஜியின் 3 வீடுகள் மற்றும் அலுவலகங்கள் ரெய்டு செய்யப்பட்டன.

சென்னையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அங்கு சீல் வைக்கப்பட்டது. திடீரென செந்தில் பாலாஜியை நோக்கி போலீசார் இவ்வளவு தீவிரமாக பாய்ந்ததன் பின்னணி பகீர் ரகம். அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் சுமார் 10 பேரை செந்தில் பாலாஜி வளைத்துப் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த 10 எம்எல்ஏக்களையும் வெளிப்படையாக எடப்பாடி மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக பேச வைக்க பிளான் போடப்பட்டுள்ளதாகவும் இதற்காக பெரும் தொகை கைமாறியதாகவும்,கை மாறிக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

பெரும்பாலும் கொங்கு மண்டலம் மற்றும் வட மாவட்டங்களை சேர்ந்த இந்த 10 எம்எல்ஏக்களையும் செந்தில்பாலாஜி தன் வசம் வைத்து எடப்பாடிக்கு எதிராக கொம்பு சீவி வருவதாகவும், அவர்கள் 10 பேருக்கும் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் திமுக சார்பில் அவர்கள் விரும்பும் தொகுதிகளில் களம் இறக்க உடன்பாடு எட்டப்பட்டுவிட்டதாகவும் சொல்கிறார்கள். இதனை அறிந்து உளவுத்துறை  கொடுத்த எச்சரிக்கையின் அடிப்படையில் தான் செந்தில்பாலாஜிக்கு எதிராக போலீசார் களம் இறங்கியுள்ளனர்.

விரைவில் செந்தில் பாலாஜி மட்டும் அல்ல அவரோடு தொடர்பில் இருந்த எம்எல்ஏக்களும் வேறு வேறு விவகாரங்களில் கைது செய்யப்படுவார்கள் என்று படபடக்கிறது அதிமுக வட்டாரம்.