பாவுட் நடிகை ரெய்மா சென் மற்றும் அக்ஷரா ஹாசன் என இரண்டு ஹீரோயின்களும் அக்னிச் சிறகுகளுக்காக இணைந்துள்ளனர். 
அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துவரும் 'அக்னிச் சிறகுகள்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள், தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்தப்படத்தின் பல முக்கிய காட்சிகள், கஜகஸ்தான் நாட்டில் படமாக்கப்பட்டுள்ளன. அந்நாட்டில் படமாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் 'அக்னிச் சிறகுகள்'தானாம். 


அங்கு படம்பிடிக்கப்பட்ட மார்ஷியல் ஆர்ட்ஸ் சட்டை காட்சிகளும், பிரம்மாண்ட விஷுவல்களும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக இருக்கும் என படக்குழுவினர் கூறிவருகின்றனர். 

இதனை உறுதிப்படுத்தும் விதமாக, கஜகஸ்தான் ஷுட்டிங்கின் போது எடுக்கப்பட்ட விஜய்ஆண்டனி, அக்ஷரா ஹாசனின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி அசரவைத்துள்ளது. ஏற்கெனவே விஜய் ஆண்டனி, அக்ஷரா ஹாசன் மற்றும் ரெய்மா சென் ஆகியோரின் கேரக்டர் லுக் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இதனையடுத்து, விரைவில் அருண் விஜய்யின் கேரக்டர் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிதாக வெளியாகியிருக்கும் அக்னிச் சிறகுகள் படத்தின் புகைப்படம், ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.

வேகமாக வளர்ந்துவரும் அக்னிச் சிறகுகள் படத்தில் பிரகாஷ் ராஜ், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே., செண்ட்ராயன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். 

கே.ஏ.பாட்சா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். தமிழ் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத பிரம்மாண்டமான திகில் அனுபவத்தை உலகத் தரத்தில் தரும் படைப்பாக அக்னிச் சிறகுகள் இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.