நீண்ட இடைவெளிக்குப் பின்னர்  திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர் ரெட்டிக்கு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நீண்ட பரிசீலனைக்குப்பின்னர் அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சேகர் ரெட்டி... தமிழக மக்களுக்கு நன்கு பரிச்சயமான பெயர், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சுமார் 300 கோடி ரூபாய் அளவிற்கு கணக்கில் வராத  பணத்தை  வருமான வரித்துறை அதிகாரிகள் இவரிடமிருந்து கைப்பற்றினர். கையில் பணமின்றி மக்கள் தவித்து வந்த நிலையில்  கத்தைக் கத்தையாக அவரின் படுக்கையறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை அதிகாரிகள் கைப்பற்றி அதிர்ச்சியை கிளப்பினர். அந்த வகையில் ரெட்டி தமிழ்நாட்டு  நன்கு பரிச்சயமானவர் தான்...

அது மட்டுமல்ல துணை முதலைச்சர் ஒ.பன்னீர் செல்வத்தின் நெருங்கிய நண்பர், தமிழக பொதுப்பணித்துறையின் ஆஸ்தான காண்ட்ராக்டர்,  மணல் மாபியா, என்று இவருக்கு  பல அடையாளங்கள் உண்டு. முறைகேடாக சொத்து சேர்த்தார், வருமானத்திற்கு அதிகமான சொத்து வைத்திருந்தார் என்பது தான் இவர் மீதான குற்றச்சாட்டு. பின்னர் அடுக்கடுக்காக வரி ஏய்ப்பு வழக்கு, அன்னிய செலாவணி மேசடி வழக்கு என்று இவர் மீது பல வழக்குகள் பாய்ந்தன. வைத்திருந்த பணத்திற்கு முறையான ஆவணங்கள் இல்லாததால் ஒரு கட்டத்தில் புழல் சிறையில் கம்பி எண்ணினார் ரெட்டி. அப்போது அவரின் அனைத்துவிதமான சொத்துக்களும் முடக்கப்பட்டது. திருப்பதி தேவஸ்தான் உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது. இத்தோடு ரெட்டி முடிந்துவிட்டார் அமலாக்கத்துறையிடம் வலுவாக சிக்கிக்கொண்டார் என்று ஊடகங்களில் செய்தி வந்தது. பின்னர் ஆற அமர செய்ய வேண்டியதை செய்து, நகர்த்த வேண்டியதை நகர்த்தி, ஒரு கட்டத்தில் தன்னிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணமெல்லாம் சொந்தமாக உழைத்து சம்பாதித்தது என சர்ட்டிபிகேட் கொடுத்து  அத்தனை வழக்குகளில் இருந்தும்  கனகச்சிதமாக  வெளியே வந்தார் ரெட்டி.

 இப்போது அதுவல்ல மேட்டர், இத்தனை சிக்கல்களில் இருந்து மீண்டவர், பிறகு சும்மா இருக்கவில்லை. அரசியிலில் பெரும் புள்ளியாக வேண்டும் , அப்படியாகவேண்டும் என்றால்,  மீண்டும் தேவஸ்தான பதவி கிடைக்க வேண்டும் என்று  முடிவு செய்து,  அதற்காக லாபி செய்ய ஆரம்பித்தார்.  பல தடைகளை தாண்டி திருப்பதி தேவஸ்தான தலைவரை சந்தித்து தனக்கு உறுப்பினர் பதவி மீண்டும் வழங்க வேண்டும் என்று நேரடியாகவே கோரிக்கை வைத்திருந்தார் ரெட்டி. ஆனால் அவர் மீது படிந்திருந்த ஊழல் கரை அதற்கு தடையாக இருந்தது.  ரெட்டிக்கு பதவி கிடைப்பதில் தாமதமானது. விவகாரம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிவரை சென்றது.  இதுதான் நேரம் என்று  மத்தியில் தனக்கு நெருக்கமானவர்களின் சிபாரிசு செய்ய சொல்லி.  மீண்டும் திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் பதவியை வெற்றிகரமாக பெற்றுள்ளார் ரெட்டி. ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இதற்கு பின்னணியில் இருந்தார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த கதையை முழுவதும்  அறிந்தவர்கள், என்னத்த சொல்ல எல்லாம் அரசியலப்பா என்கின்றனர்.