கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுசெயலாளர் ஈஸ்வரன் கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழக அமைச்சர்கள் குறுநில மன்னர்களைப் போல் செயல்பட்டு வருகிறார்கள். மாவட்டத்தை அமைச்சர்கள்தான் ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள். வேறு யாருமே அரசியல் செய்யக் கூடாது என்ற நிலையில் எல்லோரும் இருக்கிறார்கள். ஆட்சி அதிகாரம் தங்கள் கைகளில் இருப்பதால், தங்களை மீறி எதுவும் நடந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் உள்ளார்கள்.


திமுகவின் மக்கள் சபைக் கூட்டத்துக்கு உள்ளாட்சித் துறையை வைத்து எதிர்ப்பு தெரிவிப்பது ஏற்புடையது அல்ல. ஆளுங்கட்சிதான் அரசியல் கூட்டம் நடத்த வேண்டுமா என்ன? சர்வாதிகாரத்துடன் நடந்துகொள்ளும் அதிமுகவினருக்கு தேர்தலில் மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள். இணையதளம் மூலம் எந்தத் தவறும் இல்லாமல் ஒப்பந்தம் நடைபெறுவதாகப் பச்சைப் பொய் கூறி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஒப்பந்தத்தில் என்ன நடக்கும், எப்படி நடக்கிறது என்பதெல்லாம் அனைவரும் தெரிந்த விஷயம்தான். முதல்வர் மக்களை ஏமாளியாக்க நினைக்கிறார் போலும்.


ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தன்மானம் இல்லாத கட்சியாக அதிமுகவை மாற்றிவிட்டார்கள். அதிமுகதான் பாஜகவுடன் கூட்டணி எனச் சொல்கிறது. பாஜக கூட்டணிக்கு இதுவரை வெளிப்படையாக சம்மதிக்கவில்லை. 2016-ம் ஆண்டில் அதிமுகவின் கூட்டணிக்காக பாஜக ஏங்கியது. மோடியா, லேடியா எனச் சொன்னார் ஜெயலலிதா. ஆனால், அந்த நிலையெல்லாம் மாறி அரசு விழாவில் கூட்டணி தொடரும் என தெரிவிக்கும் நிலையில் உள்ளது தற்போதைய அதிமுக. ஜெயலலிதா இருக்கும்போது டெல்லியில் இருந்து யார் வந்தாலும் அவரை சந்திப்பது வழக்கம், ஆனால், தற்போது மத்திய அமைச்சரை வரவேற்க முதல்வர், துணை முதல்வர் ஓடும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது நல்ல கட்சிக்கு மரியாதையானது அல்ல” என ஈஸ்வரன் தெரிவித்தார்.