முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக 2, 3, 4 அணிகளாக பிளவுபட்டது. எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் அணியென உள்ளது.

அணிகள் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறி வந்தாலும், இணைப்பில் போதுமான முன்னேற்றமில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏ.க்கள் கூறுவதாக தெரிகிறது.

ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த ஆறுகுட்டி எம்.எல்.ஏ., கடந்த சில தினங்களுக்கு முன்பு, தன்னை ஓ.பி.எஸ். அணியினர் புறக்கணிப்பதாக கூறி அதில் இருந்து விலகினார். பின்னர் ஆறுகுட்டி எம்.எல்.ஏ. எடப்பாடி அணிக்கு தாவினார்.

ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் மாஃபா பாண்டியராஜனும், கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், அணிகள் இணைக்கும் வேலையை ஒரு மாதத்தில் முடியுங்கள். இல்லையெனில் நான் அணி மாறிக்கொள்கிறேன் என்று நேரடியாகவே ஓ.பி.எஸ். இடம் சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது.

அணிகளை இணைக்காவிட்டால் அந்தப்பக்கம் போக பலரும் தயாராக உள்ளதாக ஓ.பன்னீர்செல்வத்திடம், மாஃபா பாண்டியராஜன் கூறியதாக தெரிகிறது. மேலும் சிலரை தங்கள் வசம், இழுக்க எடப்பாடி பழனிசாமி அணியினர் முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.

மதுசூதனனும் அணிகளை இணைக்கத்தான் ஆசைப்படுகிறார். ஆனால் சில முன்னாள் அமைச்சர்கள் இணைப்புக்கு முட்டுகட்டை போடுவதாக என்று கூறியதாக தெரிகிறது.

ஓ.பன்னீர்செல்வம், என்னோடு இருக்குறவங்க எல்லாம் தானாக வந்தவங்க. என்பக்கம் வாங்கன்னு யாரையும் கூப்பிடவில்லை.  

என்பக்கம் உள்ளவர்களிடம் பணம் கொடுத்து அங்கே இழுக்கப்பார்க்கிறார்கள். ஆட்சிக்கு நான் எந்த சிக்கலையும் உண்டாக்காமல் இருந்தேன். இப்போது அவர்கள் செய்யுறதுக்கு எல்லாம் நான் அமைதியாகவே இருந்தால் எல்லாரையும் அந்தப்பக்கம் இழுத்துக்கொள்வார்கள் என்கிறாராம் ஓ.பன்னீர்செல்வம்.