கடந்த சட்டசபை கூட்டத்தொடரில், உலகெங்கும் பரவி வாழும் தமிழ் மக்களின் உதவியுடன் தமிழகத்தில் முதலீடுகளை அதிகரிக்க " யாதும் ஊரே " என்கிற தனி சிறப்பு பிரிவு மற்றும் வலைதளம் உருவாக்க சுமார் 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று 110 விதியின் கீழ் அறிவித்தார் முதல்வர். இதன்கீழ் ஜப்பான், சீனா, தைவான், ஜெர்மனி, இஸ்ரேல், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய  நாடுகளுக்கென முதலீட்டு தூதுவர்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு இன்று முதல் 14 நாட்கள் அரசுமுறை பயணம் மேற்கொள்ள இருக்கிறார் முதல்வர். இன்று காலை 9.50 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் துபாய்க்கு செல்லும் முதல்வர், அங்கிருந்து பிற்பகல் 2.15 மணிக்கு லண்டனுக்கு விமானம் மூலம் புறப்படுகிறார். இந்த விமானம் லண்டனை மாலை 6.40 மணிக்கு சென்றடைகிறது.

செப்டம்பர் 1-ந்தேதி மாலை அமெரிக்காவுக்கு விமானத்தில் எடப்பாடி பழனிச்சாமி புறப்படுகிறார். அணைத்து பயணங்களையும் முடித்த பிறகு செப்டம்பர் 10 ம் தேதி தமிழகம் திரும்புகிறார்.முதல்வர் பழனிச்சாமியோடு இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரும் செல்ல இருக்கிறார்.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது அரசுமுறை பயணங்கள் மேற்கொண்டதே இல்லை. அந்த வகையில் எம்ஜிஆருக்கு பின் அதிமுகவின் சார்பில் முதல்வராக இருக்கும் ஒருவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

முதல்வரின் வெளிநாடு பயணத்தின் போது அவரது பொறுப்புகள் யாரிடமும் ஒப்படைக்க படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.