After 21 years IT raid in Jayalalitha house

ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நினைத்த சசிகலாவுக்கு சறுக்கல்கள் ஏற்பட்டுவருகிறது. கடந்த சில நாட்களாக சசிகலா உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய மெகா சர்ஜிகல் ரெய்டில் பல்வேறு ஆவணங்கள் நகைகள் கைப்பற்றப்பட்டது.

இந்தியாவின் மூன்றாவது பெரியக்கட்சி, தமிழகத்தின் அதிகார மையமாக திகழ்ந்த ஜெயலலிதாவின் மரணம் இன்னும் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சாகவே இருந்து வருகிறது. ஜெயலலிதா மறந்த நாட்களிலிருந்து சசி குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள் சொல்லி மாளாது. ஆனால் இத்தனை எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் என இவ்வளவு பேர் இருந்தாலும் இவர்களால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. 

கடந்த 9 ஆம் தேதி சசிகலா உறவினர்கள், நண்பர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் 1800 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர் நிறுவனம் என பல்வேறு இடங்களிலும் சோதனை நடைபெற்றது. 

இந்த சோதனை 6 நாட்களுக்கு மேலாக நீடித்தது. இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் சசிகலா குடும்பத்தினர் ஒவ்வொருவரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் முக்கியமாக ஜெயா டிவி சிஇஓ விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன், இளவரசியின் மகள்கள் கிருஷ்ணப்பிரியா, சகிலா, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர். இதில் சற்று நேரத்திற்கு முன்பு ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன இரண்டாவது முறையாக வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். 

இந்நிலையில் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 21 வருடத்திற்குப் பிறகு சோதனை நடப்பது அதிமுகவினரை அதிர வைத்துள்ளது.

கடந்த 1996ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி ஜெயலலிதா மீது ஊழல் புகார்கள் எழுந்தபோது ஒரு மெகா ரெய்டு நடந்தது. அதன் பிறகு இப்போது மீண்டும் போயஸ் கார்டனில் ரெய்டு நடக்கிறது. 1996ம் ஆண்டு நடந்த அந்த ரெய்டு 5 நாட்கள் நடந்தது. அதில் பல முக்கிய ஆவணங்கள், நகைகள், நூற்றுக்கணக்கான செருப்பு ஜோடிகள் மற்றும் இன்னும் பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அப்போது நடந்த அந்த ரெய்டு நாடு முழுவது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதா மறைந்து ஒரு வருடம் ஆகவுள்ள நிலையில் இப்போது சசிகுடும்பத்தால் ஒரு மெகா ரைடு நடக்கிறது. வருமானவரித்துறையின் இந்த அதிரடியால் போயஸ் கார்டன் வீட்டுக்கு முன்பு அதிமுகவினர் குவிந்துள்ளனர். சசிகலா அறை, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் அறை என ரூம் ரூமாக அதிகாரிகள் சோதனையிட்டு வருவதாக கூறப்படுகிறது. அம்மா இறந்து இன்னும் ஒருவருடம் கூட ஆகாதா நிலையில் தங்களுக்கெல்லாம் கோவிலாக விளங்கும் அம்மா வாழ்ந்த இல்லத்தில் மோடிக்கு அடிமையாக இருக்கும் இவர்களால் இப்போது அம்மாவின் கோவிலில் கறைபடிந்த விட்டதென அதிமுகவினர் புலம்பி வருகிறார்களாம்.