தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு பிறகு வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பது போடப்பட்டது. தேர்தலில் மக்கள் அளித்த வாக்குகள் ஜனவரி 2ம் தேதி எண்ணப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இரவு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நீடித்தது. இன்று காலையில் இருந்து தற்போது வரையிலும் வாக்குகள் இடைவிடாமல் எண்ணப்பட்டு வருகின்றன. திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தநிலையில் சேலம் மாவட்டத்தில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. முதல்வர் பழனிசாமியின் சொந்த ஊரான எடப்பாடியில் அனைத்து வார்டுகளையும் அதிமுக கைப்பற்றியுள்ளது. எடப்பாடி ஒன்றியத்தில் இருக்கும் 13 கவுன்சிலர் பதவிகளில் 9 அதிமுகவும் 3 ல் பாமகவும் வென்றுள்ளது.

சேலம் மாவட்டத்தில் இருக்கும் 20 ஊராட்சி ஒன்றியங்களில் 13 ஊராட்சியை அதிமுக கைப்பற்றி இருக்கிறது. இதனால் அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். முதல்வரின் சொந்த மாவட்டம் என்பதால் சேலத்தில் அதிமுகவின் வெற்றி முக்கியமாக கருதப்படுகிறது. எனினும் பெரும்பாலான மாவட்டங்களில் திமுகவே அதிக வெற்றியை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.