அதிமுக மீண்டும் மக்களிடம் தனது வலிமையை நிரூபிக்க நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் வாய்ப்பாக அமைந்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுக மீண்டும் மக்களிடம் தனது வலிமையை நிரூபிக்க நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் வாய்ப்பாக அமைந்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாநகராட்சியின் 60 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக, தமாகா வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், ஈரோடு அதிமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான செங்கோட்டையன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, அவர், 1972 அதிமுக எம்ஜிஆர் துவக்கிய போது இந்த படம் 100 நாட்கள் ஓடுமா? என்று கேலி செய்தார்கள்.

ஆனால் அது 1973 நடைபெற்ற திண்டுக்கல் தேர்தலில் அதிமுக 2.97 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது. அதன் பிறகு, கோவை மேற்கு மற்றும் மருங்காபுரி இடைத்தேர்தல்களில் மகத்தான வெற்றி பெற்றது. திரைப்படத் துறையில் மட்டுமின்றி, அரசியலிலும் மகத்தான வெற்றியை இறுதிக்காலம் வரை நிகழ்த்தியவர் எம்ஜிஆர். அவரது வழியில் ஜெயலலிதா ஆட்சி புரிந்தார். அவரது ஆட்சியில் தொட்டில் குழந்தை திட்டம், கர்ப்பிணி பெண்கள் 14 வகையான உதவிப் பொருட்கள், 57 லட்சம் மடிக்கணினிகள், திருமண உதவி தொகை, பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம் போன்ற எண்ணற்ற நலத் திட்டங்கள் மக்களுக்கு கிடைத்தது.

அவரது வழியில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வமும் மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்தனர். அதிமுக மீண்டும் மக்களிடம் தனது வலிமையை நிரூபிக்க இந்த தேர்தல் களம் வாய்ப்பாக அமைந்துள்ளது. தேர்தல் களம் என்பது மக்களின் மனநிலையை புரிந்துகொள்வதற்கும், மக்களுக்கு மீண்டும் நல்ல முறையில் சேவை செய்வதற்கும் வாய்ப்பாக அமையும். இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்று, மேயர் பதவியை கைப்பற்றி ஈரோடு மாநகரம் அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம் என்று தெரிவித்தார்.
