பகுஜன் சமாஜ் கட்சி தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் என வாக்கு வங்கியை நம்பியிருந்தது. அதுபோல அதிமுகவும் முக்குலத்தோர், கவுண்டர் வாங்கு வங்கி என்றுதான் ஓபிஎஸ் - இபிஎஸ் பயணிக்கிறார்கள். 

உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை சிறுதாக்கியது போல அதிமுகவையும் செய்யும் பணிகளை பாஜக செய்து வருவதாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக நான்கு உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் பாஜக 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்ட கட்சி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 2007 முதல் 2012 வரை ஆட்சியில் இருந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி வெறும் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் இந்தக் கட்சி கரைந்த விதத்தையும் அதிமுகவில் நடக்கும் விஷயங்களை ஒப்பிட்டு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி யூடியூபில் வீடியோ வெளியிட்டு விளக்கியுள்ளார்.

அதில் கே.சி. பழனிச்சாமி கூறுகையில், “உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் வெளி வந்தவுடன், தமிழகத்திலும் பாஜக 2024-ஆம் ஆண்டிலோ அல்லது 2006-ஆம் ஆண்டிலோ ஆட்சியைப் பிடிக்கும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜகவின் வெற்றிக்கு ஓபிஎஸ் - இபிஎஸ் என இருவருமே வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால், அண்ணாமலையின் கருத்தை மறுத்தோ அல்லது அதிமுகதான் ஆட்சியைப் பிடிக்கும் என்றோ ஓபிஎஸ் - இபிஎஸ் கூறவில்லை. உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி இன்று ஓரிடத்தில் மட்டும்தான் வென்றுள்ளது. மாயாவதி 5 முறை முதல்வராக இருந்தவர். தொடக்கத்தில் பாஜகவுடன் சிறிய அளவிலோ பின்னர் பெரிய அளவிலோ கூட்டணி அமைத்தவர். இன்று பகுஜன் சமாஜ் கட்சியை சிறுதாக்கி, ஒரே ஒரு தொகுதியில் வெல்லும் அளவுக்கு அக்கட்சியை பாஜக மாற்றிவிட்டது.

இதுதான் பாஜக எல்லா மாநிலங்களிலும் கடைப்பிடிக்கும் உத்தி. உத்தரப்பிரதேசத்தில் அவர்கள் செய்தார்கள். தமிழ்நாட்டிலும் இதைத்தான் அவர்கள் திட்டமிட்டு செய்து வருகிறார்கள். பகுஜன் சமாஜ் கட்சி தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் என வாக்கு வங்கியை நம்பியிருந்தது. அதுபோல அதிமுகவும் முக்குலத்தோர், கவுன்டர் வாங்கு வங்கி என்றுதான் ஓபிஎஸ் - இபிஎஸ் பயணிக்கிறார்கள். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட வாக்கு வங்கி அப்படியேத்தான் இருக்கிறது. ஆனால், அதை ஓபிஎஸ் - ஈபிஎஸ் பலப்படுத்தவில்லை. பாஜக சமுதாய ரீதியிலான தொடர்புகளை பலமாக்கி, அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி, அந்த வாக்கு வங்கியை மாற்றும் முயற்சிகளை செய்கிறார்கள். இது முக்கியமான ஒரு விஷயம்” என்று கே.சி. பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.