சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிவதற்குள் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரவுவை அதிமுகவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் அதிமுக இறங்கியுள்ளது. 
 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக இருந்த கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகியோரை  தகுதி நீக்கம் செய்ய ஆளும் அதிமுக முடிவு செய்தது. ஆனால். சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து திமுகவுக்கு அதற்கு வேட்டு வைத்தது. இடைத்தேர்தல் முடிவுகளில் தங்களுக்கு நெருக்கமான வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் திமுக 3 எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்கத்துக்கு முட்டுக்கட்டைப் போட்டது.


ஆனால், தேர்தலில் 9 தொகுதிகளில் வென்று அதிமுக தெம்பாக ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டதால், திமுக ஏமாற்றமடைந்தது. 3 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை வைத்து தங்கள் கட்சி உள்விவகாரங்களில் தலையிட்ட திமுகவுக்கு பதிலடி தரும் நடவடிக்கையில் அதிமுக இறங்கியது. அதன் பலனாக 3 எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்ட அதிமுக, அவர்களைக் கட்சிக்குள் கொண்டுவர முடிவு செய்தது. அதன் அடிப்படையில் ரத்தின சபாபதியையும் கலைச்செல்வனையும் பேசி அதிமுக சரி செய்துவிட்டது. இருவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டார்கள்.


கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு மட்டும் இன்னும் முதல்வரை சந்திக்காமல் இழுத்தடித்துவருகிறார். அவரும் அதிமுகவுக்கு வந்துவிடுவார் என்று அதிமுக அமைச்சர்களும் சொல்லிவருகிறார்கள். குறிப்பாக இந்தச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவதற்குள் பிரபுவை இழுக்க அதிமுக முயற்சி செய்துவருகிறது.  ஆனால், அவரோ, “நான் அதிமுகவில்தான் இருக்கிறேன்.  நான் இந்த அரசுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறேன். தொடர்ந்து அதிமுக எம்எல்ஏவாகவும் சசிகலா ஆதரவாளராகவும் இருப்பேன். இதில் எந்த மாற்றமும் இல்லை" என்று சொல்லிவருகிறார்.


என்றாலும் பிரபுவை மீண்டும் தங்கள் பக்கம் இழுக்கும் நடவடிக்கைகளை அதிமுக தொடர்ந்து மேற்கொண்டுள்ளது.சட்டப்பேரவையில் ஏற்கனவே போதுமான எண்ணிக்கை அதிமுகவுக்கு இருந்தாலும், எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ள பிரபுவை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையை அதிமுக தொடர்வதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை மீண்டும் அதிமுகவுக்குக் கொண்டுவர திமுக போட்ட முட்டுக்கடையே காரணம் என்பதால், அவர்களை வைத்து திமுகவுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக இதை அதிமுக அணுகிவருவதால், பிரபுவையும் எப்படியும் அதிமுகவுக்குள் கொண்டுவந்துவிடுவார்கள் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.