அமமுக தொடர் தோல்வி, கட்சியினர் வெளியேற்றம் காரணமாக டி.டி.வி.தினகரன் தலைமை குறித்தும் தினகரனை ஒதுக்கிவிட்டு சசிகலா அதிமுகவில் இணைந்து அதிமுகவுக்கு தலைமை ஏற்பார் என்கிற கருத்தும் ஓடுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் திவாகரன் கூறுகையில், ‘’வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது அப்போது முடிவு செய்து போட்டியிடுவோம். டி.டி.வி.தினகரனை நம்பி போன எம்.எல்.ஏ.,க்களை யாரும் கண்டு கொள்ளவில்லை. அவர்களுக்கு பதவி போனது தான் மிச்சம்.

ஏராளமான எதிரிகளிடம் இருந்து சசிகலாவை காப்பாற்றி இருக்கிறேன். சசிகலாவுக்கு வெளியில் இருந்து எதிரி வந்திருந்தால் சந்தித்திருப்பேன். உள்ளே உறவில் இருந்து வந்ததால் யோசிக்கிறேன். டி.டி.வி.தினகரன் என்ற ஒருவரை தனிமைப்படுத்தினால் மட்டுமே அதிமுக ஒன்றிணையும். அப்போது, சசிகலாவின் தலைமையை ஏற்க தயாராக இருக்கிறேன். மத்திய அரசின் திட்டங்களை, தமிழக மக்கள் நலன் குறித்து யோசிக்காமல் தமிழக அரசு அப்படியே செயல்படுத்த விரும்புகிறார்கள்.

ஆனால், தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை அரசு எதிர்க்க வேண்டும். ஆதரிப்பதை மட்டுமே ஆதரிக்க வேண்டும். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சோனியா காந்தி பற்றி பேசியது தவறு. அவர் மட்டுமல்ல. யாரும், யாரையும் தரம் தாழ்த்தி பேச கூடாது. இப்படி இவர்கள் ஆளுக்கொன்று பேசி, மக்களை குழப்பத்தில் வைத்திருக்கின்றனர்.

அதை கண்டு கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி சென்று கொண்டிருக்கிறார். இனிமேல் தமிழகத்தில் நடிகர்கள் ஆளும் வாய்ப்பு வரவே வராது. மக்கள் நலனில் முழு முனைப்பு காட்டினால் மட்டுமே கட்சிகள் வெற்றியடைய முடியும். அதிமுக ஆட்சியை எடப்பாடி பழனிசாமி காப்பாற்றி விட்டார். ஆனால் கட்சியினர் மன வருத்தத்தோடு ஒதுக்கி இருக்கிறார்கள். அதிமுக மீண்டும் வெற்றிப் பெற வாய்ப்பிருக்கிறது. ஆனால், அதற்கு தொண்டர்களுக்கு நிறைய மருந்துகள் தர வேண்டியுள்ளது’’ என அவர் தெரிவித்துள்ளார்.