admk symbol case tomorrow inquiry

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக உடைந்ததால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் தரப்பில் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவது தொடர்பாக ஆவணங்களும் பிரமாணப் பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டன.

பின்னர் முதல்வர் பழனிச்சாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் இணைந்தபிறகு சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தனர். சின்னம் தொடர்பான விசாரணையில் தங்கள் தரப்பு கருத்துகளையும் கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் தினகரன் கோரிக்கை விடுத்தார்.

இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக அக்டோபர் 31-ம் தேதிக்குள் இறுதி முடிவை அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. 

இதையடுத்து இரு அணிகளும் தங்கள் தரப்பு கூடுதல் ஆவணங்களை செப்டம்பர் 29-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் விசாரணை அக்டோபர் 6-ம் தேதி(நாளை) நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து ஏற்கனவே கட்சி பொதுக்குழுவில் சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சி பொறுப்புகளிலிருந்து நீக்கிய தீர்மானம், இரட்டை இலை சின்னத்தை மீட்க நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகியவற்றின் நகலையும் அதுதவிர மேலும் கூடுதலாக பிரமாணப் பத்திரங்களையும் முதல்வர் பழனிச்சாமி அணியினர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர். 

தேர்தல் ஆணையத்தில் நாளை நடைபெற உள்ள விசாரணையின்போது முதல்வர் பழனிசாமி மற்றும் தினகரன் அணியினர் நேரில் சென்று தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க உள்ளனர்.

ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளின் பட்டியல், அவர்கள் ஆதரவு கடிதம் உள்ளிட்டவை மற்றும் கட்சி விதிகளில் மாற்றம், அதற்காக பெறப்பட்ட ஆதரவு உள்ளிட்ட விவரங்களையும் எழுத்துப்பூர்வமாகவும், நேரிலும் முதல்வர் பழனிசாமி தரப்பில் எடுத்துரைக்க உள்ளனர். முதல்வர் பழனிசாமி அணி சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார், சி.வி.சண்முகம் மற்றும் மைத்ரேயன் எம்.பி, கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆஜராக உள்ளனர். 

தினகரன் அணி சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தலைமையில் அவரது ஆதரவு நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராக உள்ளனர்.

நாளை விசாரணை முடிந்தவுடன் இரட்டை இலை சின்னமும் கட்சியின் பெயரும் யாருக்கு என்பது தெரிந்துவிடும். 

இதற்கிடையே, கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தினகரன் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை இன்று மதியம் நடைபெறுகிறது.