சசிக்கு சிறை, கூவத்தூர் கலாட்டா, தர்மயுத்தம், நம்பிக்கை வாக்கெடுப்பு, அணிகள் இணைவு, ஈகோ யுத்தம் என்று ஆயிரத்தெட்டு கலவர, களேபரங்கள் அ.தி.மு.க.வில் போய்க் கொண்டிருந்தாலும் அவ்வப்போது ரிலாக்ஸ்ட் செய்ய உதவுவது தீபா - மாதவனின் அக்குறும்புகள்தான். 

‘எங்க அத்தை ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு நான். எனக்குதான் கட்சியும், அவரோட சொத்துக்களும் வேணும்!’ என்று தீபா சவுண்டு விட்டதும், அது எடுபடாமல் போயி தனி கட்சி துவக்கியதும், நண்பன் ராஜாவுக்காக கணவர் மாதவனை மிரட்ட, அவர் கோபிச்சுட்டு போயி இன்னொரு தனி அணி துவக்கியதும், அ.தி.மு.க.வின் வரலாற்றின் புண் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. 

இந்நிலையில் வருமான வரித்துறை சமீபத்தில் ‘வரி பாக்கி வைத்துள்ளதால் அவரது போயஸ்கார்டன் உட்பட குறிப்பிட்ட சில சொத்துக்களை முடக்கியுள்ளோம்.’ என்று ஒரு பூகம்பத்தை கிளப்பினர். இந்த தடாலடிக்கு தமிழக அமைச்சரவையில் பலருக்கு ஹார்ட் அட்டாக் வரும் என்று எதிர்பார்த்தால், எல்லோரும் ஜீரண ஏப்பம் விட்டபடி அடுத்த வேலையை பார்க்கப் போய்விட்டனர்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் வாரிசு நானே, எனக்கே சொத்து வேண்டும் என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்த தீபாவிடம், ‘அந்த வரிபாக்கியை நீங்க கட்டுவீங்களா?’ என்று கேட்டால், அன்பு மனைவிக்காக வாய் திறக்கும் அவர் கணவர் மாதவன்...”அம்மாவின் சொத்து விஷயங்கள் கோர்ட்டில் இருப்பதால் அது பற்றி கருத்து தெரிவிக்க முடியாது. அதேவேளையில், வருமான வரித்துறைக்கு ஜெயலலிதா பாக்கி வைத்திருக்கிற தொகையை செலுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லவேயில்லை.” என்று ஒரே போடாக போட்டிருக்கிறார். 

தீபா குடும்பத்தின் இந்த முடிவு அ.தி.மு.க.வினரை கடும் டென்ஷனாக்கியுள்ளது...”ஆன்னா ஊன்னா கார்டன் வீட்டுக்கு முன்னாடி வந்து நின்னு சொத்து கேட்டு கரகாட்டம் ஆட வேண்டியது, கேஸ் போட வேண்டியது. ஆனால் அம்மா வீட்டுக்கு ஒரு பிரச்னைன்னு வர்றப்ப காசு கொடுக்க மட்டும் மனசு வராது இல்லையா! இப்படிப்பட்ட தீபா, தன்னை வாரிசுன்னு சொல்லிக்கிறது அம்மாவுக்கு கேவலம்.” என்று கண் சிவக்கிறார்கள். 

காசுதானே உலகம், அது மாது - பேபிம்மாவுக்கும் பொருந்தும்தானே!