அதிமுக எந்த காரணத்திற்காகவும் இரண்டாக உடையக் கூடாது என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக எந்த காரணத்திற்காகவும் இரண்டாக உடையக் கூடாது என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சுமார் 2900 உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது வெளியே தொண்டர்கள் சிலர் ஒற்றைத் தலைமை வேண்டும் என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலோசனைக் கூட்டத்திலும் ஒற்றைத் தலைமை வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் பலர் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியானது. இதுமட்டுமின்றி, அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக ஓ.பன்னீர்செல்வம் வரவேண்டும் என சென்னையின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இத்தகைய போஸ்டர்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் கிழிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

போஸ்டர்களை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இது அக்கட்சியில் பெரும் மோதல்களை உண்டாக்கியுள்ளது. இந்த நிலையில் எந்த காரணத்திற்காகவும் அதிமுக இரண்டாக உடையக் கூடாது என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொது செயலாளர் என்ற பதவி இனி யாருக்கும் வழங்க கூடாது என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. பொதுச்செயலாளர் பதவிக்கு வேறு ஒருவரை கொண்டுவருவது ஜெயலலிதாவுக்குச் செய்கிற துரோகம். தொண்டர்களிடமிருந்து என்னை பிரிக்க முடியாது, அதிமுகவிலிருந்து என்னை ஓரங்கட்ட முடியாது. இன்றைய கால கட்டத்தில் இரட்டை தலைமை நன்றாக சென்று கொண்டுள்ளது.

இந்த நேரத்தில் ஒற்றைத் தலைமை பிரச்சனை தேவைதானா? எதிர்க்கட்சியாக ஒற்றுமையோடு பணியாற்றி ஆளுங்கட்சியாக வேண்டும், எந்தவித அதிகார ஆசையும் எனக்கு இல்லை.தொண்டனாகவே பணியாற்றி வருகிறேன். நானோ எடப்பாடி பழனிசாமியோ ஒற்றைத் தலைமை என்பது குறித்து பேசியதில்லை. நான் எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்க காரணம் தொண்டர்கள் தான். எந்த காரணத்திற்காகவும் அதிமுக இரண்டாக உடையக்கூடாது, ஆகவே ஈபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்த நான் தயார். நானும், ஈபிஎஸும் பேசி ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு முடிவு காண வேண்டும். பொதுக்குழுவுக்கு முன்னதாக நாங்கள் இணைந்து ஒரு முடிவெடுத்து விட்டால் பொதுக்குழுவில் எந்த பிரச்னனையும் வராது என்று தெரிவித்தார்.
