admk put banners with chief minister photo

பேனர்கள், கட் அவுட்கள் வைக்க நீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், முதல்வர் பழனிசாமியின் நிழற்படத்தை போட்டு பேனர் வைக்கப்பட்டுள்ளது.

பேனர்கள் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக பேனர்கள், கட் அவுட்கள் வைக்கக்கூடாது. உயிருடன் இருப்பவர்களுக்கு கட் அவுட் வைக்கக்கூடாது மற்றும் உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களை போட்டு பேனர் வைக்கக்கூடாது. இவற்றை எல்லாம் உள்ளாட்சித்துறை அதிகாரிகளும் போலீசாரும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவை சற்றும் பொருட்படுத்தாமல், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு சாலைகளையும் நடைபாதைகளையும் ஆக்கிரமித்து பேனர்களும் கட் அவுட்களும் வைக்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. 

நாளை(டிசம்பர் 3) கோவையில் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக கடந்த மாதம் 21-ம் தேதியே பேனர்கள் வைக்கும் பணி தொடங்கப்பட்டு விட்டது. கடந்த 21-ம் தேதி இரவு சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவில் மோதி ரகு என்ற இளைஞர் உயிரிழந்தார். இந்த சம்பவம் கோவை மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கோவையில் பேனர்களை அகற்றுமாறு உத்தரவிட்டது. அதிகாரிகளுக்கு கண்டனமும் தெரிவித்தது.

இவ்வாறு பேனர்கள் தொடர்பான கட்டுப்பாடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க நீதிமன்றமும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துவருகிறது. பேனர் கலாச்சாரம் மக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்கள் பேனர்களில் இடம்பெறக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரின் புகைப்படங்களை பேனர்களில் போட முடியாத சூழல் உள்ளது. 

ஆனாலும், சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடக்கும் விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்துகொள்கிறார். அந்த விழாவை ஒட்டி ஆத்தூரில் வைக்கப்பட்ட பேனர் ஒன்றில், முதல்வர் பழனிசாமி, நிற்கும் நிலையிலான நிழற்படத்தை போட்டுள்ளனர். 

புகைப்படம் தானே போடக்கூடாது. நிழற்படம் போடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிடவில்லை அல்லவா..? என்று கேட்பது போல உள்ளது அந்த பேனர்..

ஆக மொத்தத்தில் பேனர் வைப்பதை தடுக்க முடியாது என்பதை பறைசாற்றும் விதமாக அந்த பேனர் வைக்கப்பட்டுள்ளது. 

என்னமோ சரிதான் போங்க....