திமுக இரண்டு பட்டா இவர்களுக்கு தான் கொண்டாட்டம் போல; அதிமுக கட்சி பத்திரிக்கையில் தலைப்பு செய்தியில் அழகிரி
விருவிருப்பான திரைக்கதையுடன் இருக்கையின் நுனிக்கே ரசிகரை கொண்டு செல்லும் சூப்பர் ஹிட் படங்களை எல்லாம் மிஞ்சி இருக்கிறது தமிழகத்தின் சமீபத்திய அரசியல் சூழல்.

ஜெயலலிதா மறைவு, அதிமுக அணிப்பிளவு, சின்னம்மா அணி, இபிஎஸ் அணி ஓபிஎஸ் அணி, தினகரன் அணி என அதிமுக பிளவு பட்டு  திடீர் திருப்பங்களுடன் போய்க்கொண்டிருந்த தமிழக அரசியல், தற்போது நிகழ்ந்த திமுக தலைவர் கலைஞரின் மறைவால் மேலும் தாறுமாறாகி இருக்கிறது.

தமிழக அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதி போன்றோரின் அரசியல் ஆளுமைக்கு நிகரான இன்னொரு அரசியல்வாதியை பார்ப்பது என்பது அரிதினும் அரிது. இதனாலேயோ என்னவோ இவர்களின் மரணத்தின் போது உச்சகட்ட துயரினை அடைந்தது தமிழகம். அதே போல தான் திணறிக் கொண்டிருக்கின்றன இந்த இரு கட்சிகளும்.

திமுகவில் அதிமுகவில் ஏற்பட்டது போல எந்த வித பிரச்சனையும் ஏற்படாது என்ற கருத்து நிலவிய தருணத்தில், தற்போது அழகிரி புது பிரச்சனையை கிளப்பி இருக்கிறார். திமுக உடையும் என்று அவரே கூறிப்பது மிகப்பெரிய அளவில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. அவர் இவ்வாறு கூறி இருப்பது அதிமுகவிற்கு சந்தோஷத்தை அளித்திருக்கிறது என உணர்த்தும் வகையில் அமைந்திருக்கிறது அதிமுக கட்சி பத்திரிக்கையில் இடம் பெற்றிருக்கும் தலைப்பு செய்தி.

தலைவர் காலமான ஒரே வாரத்தில் பதவி சண்டை எனும் தலைப்பில், திமுக உடைகிறது என்று கொட்டை எழுத்தில் இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறது அதிமுகவின் கட்சி பத்திரிக்கை ”நமது அம்மா”. திமுக விசுவாசிகள் தன்பக்கம் என்றும், திமுக உடையும் என்றும் அழகிரி கூறிய வார்த்தைகள் தான் இந்த செய்தியின் ஹைலைட்டே.

இந்த ஒரு விஷயத்துக்கே இப்படி செய்தி வந்திருக்கிறது என்றால், அதிமுகவில் நடந்த களேபரங்களை எல்லாம் எப்படி வெளுத்து வாங்கி இருக்கும் ”நமது அம்மா” பத்திரிக்கை என்று நினைத்து பார்க்க்கையிலேயே பிரமிப்பாக இருக்கிறது