உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் பாமக கூட்டணி தொடரும் என்று அக்கட்சியின்  தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.
  நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பாமக தலைவர் ஜி.கே. மணி திரு நெல்வேலி வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே. மணி, உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார்.


 “அதிமுக - பாமக கூட்டணி பலமாக உள்ளது. நாங்குநேரியிலும் விக்கிரவாண்டியிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறப்போவது உறுதியாகிவிட்டது. இன்னும் ஒன்றரை ஆண்டு காலம்தான் இந்த அரசின் பதவிக் காலம் உள்ளது. எனவே ஆளும் கட்சி வெற்றி பெற்றால்தான் தொகுதியில் வளர்ச்சி திட்டங்களும் நல்லதும் கிடைக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.
 நாடாளுமன்ற தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி வெற்றி பெற்றது. விவசாய கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி செய்வோம் திமுகவினர் சொன்னார்கள். அதை நம்பிதான் பொதுமக்களும் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்தனர். ஆனால், தேர்தல் வெற்றிக்கு பிறகு எதையும் அவர்கள் தள்ளுபடி செய்யவில்லை. எனவே, திமுகவின் பொய்ப் பிரசாரங்கள் பொதுமக்களிடம் இனியும் எடுபடாது.
தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் திமுக - காங்கிரஸ் தலைவர்கள், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களை அவதூறாகப் பேசுகிறார்கள். அவர்களின் பேச்சு  பொது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாவட்டத்தில் இருந்த தென்காசியை தனி மாவட்டமாக முதல்வர் அறிவித்துள்ளார். அதுபோல 5 புதிய மாவட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். இதெல்லாம் பாமகவின் நீண்டநாள் கோரிக்கை. இதை நிறைவேற்றிய முதல்வரை பாராட்டுகிறோம். வரும் உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்.” என்று ஜி.கே. மணி தெரிவித்தார்.