ADMK Parliamentary Board To Decide Candidate For By Election In RK Nagar
வார்த்தைக்கு வார்த்தை வன்மம் ஏற்றி, சசிகலா மற்றும் தினகரன் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கும் அமைச்சர் ஜெயக்குமார் இன்று அவைத்தலைவர் மதுசூதனனிடம் தோற்றிருக்கிறார். ஆம்! ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக மதுவை அறிவித்து ஜெயக்குமாருக்கு நாக் அவுட் கொடுத்திருக்கிறது பன்னீர் அணி. பெரும் நெருக்கடிக்குப் பின்னரே எடப்பாடியும் இதற்கு சம்மதித்ததாக சொல்லப்படுகிறது.
பன்னீர் ‘தர்மயுத்தம் சீசன் 1’ நடத்திக் கொண்டிருந்த காலத்தில்தான் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. எடப்பாடி தரப்பு தினகரனை வேட்பாளராக அறிவிக்க, பன்னீர் அணியோ மதுசூதனனை வேட்பாளராக்கியது.
அதன் பிறகு இடைத்தேர்தல் ரத்தாகி, எடப்பாடி அணியால் தினகரன் தூக்கி எறியப்பட்டு, பன்னீர் - பழனி இரு அணிகளும் இணைந்த காட்சிகள் வரிசை கட்டின.
இந்நிலையில் இரட்டை இலை சின்னம் பழனி - பன்னீர் அணிக்கு ஒதுக்கப்பட்ட மறுநாளே ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது. தங்கள் அணியின் பழைய வேட்பாளர் தினகரன் இப்போது தங்களின் பரம வைரியாகிவிட்ட நிலையில், யாரை வேட்பாளராக்குவது? என எடப்பாடியார் குழம்பி நின்றார். இந்த சூழலில் பன்னீரோ ‘நாங்கள் அன்று அறிவித்த மதுசூதனனையே வேட்பாளராக்குவோம்.’ என்றார்.
ஆனால் இதற்கு மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஒரு டீம் கடுமையான ஆட்சேபனையை காட்டியது. இதற்கு எடப்பாடியாரும் ஒத்திசைத்தார்.
வெகுண்ட மதுசூதனனோ ‘என் தலைவன் பன்னீர்செல்வம்தான். அம்மா கூட என்னை பல காலம் டம்மியாக வைத்திருந்தார். ஆனால் பன்னீரோ என்னை எம்.எல்.ஏ.வேட்பாளராக அறிவித்து மரியாதை தந்தார். ஆக என்றுமே என் தலைவன் பன்னீர்தான்.’ என்றார்.
.jpg)
இது எடப்பாடி அணியை டென்ஷனாக்கிட, அமைச்சர் ஜெயக்குமார் ‘அமாவாசை இருட்டில் பெருச்சாளி சென்ற இடமெல்லாம் பாதைதான் என்பது போல் மதுசூதனன் பேசுகிறார், செயல்படுகிறார்.’ என்று போட்டுத்தாக்கினார்.
இதற்கு பன்னீர் அணியில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், ஆர்.கே.நகர் தேர்தலுக்கு விருப்ப மனு கொடுக்கும் மேளாவை துவக்கினர். யார் பணம் கட்டினாலும் சீட் மதுசூதனனுக்குதான்! என்றார் பன்னீர். பார்க்கலாம்! என்றார் எடப்பாடி. இதில் காரசார விவாதங்கள் அரங்கேறி இருக்கின்றன.
.jpg)
பின் பன்னீர் டீமும், பழனிசாமி டீமும் விவாதித்திருக்கிறார்கள். பன்னீரோ ‘மதுசூதனனே’ என்றிருக்கிறார். ஆனால் ஜெயக்குமாரோ விட்டேகொடுக்கவில்லை. எடப்பாடியார் இதற்கு அமைதிகாக்க, மிக காரசாரமான விவாதம் நடந்தேறியிருக்கிறது. பின் ஒரு கட்டத்தில் ’இது எங்க அணிக்கு பிரெஸ்டீஜ் விஷயம். மதுசூதனன் அண்ணனை நீங்க மனசார ஏத்துக்குறதா இருந்தா சொல்லுங்க. இல்லேன்னா நாங்க தனியா நின்னு அவரை வெற்றி பெற வைக்கிறோம். இத்தனை வருஷமா அவைத்தலைவரா அம்மா அவரை அமர்த்தியிருக்காங்க.
அப்படிப்பட்ட சீனியருக்கு ஒரு மரியாதை இல்லேன்னா எப்படி?” என்று ஓங்கியடித்து பேசியிருக்கிறார் பன்னீர். எடப்பாடி அமைதியாகிவிட்டார், ஆனால் ஜெயக்குமார் மசியவில்லை. கூட்டம் அத்தோடு கலைந்துவிட்டது.
.jpg)
இந்நிலையில் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய இன்று காலையில் ராயப்பேட்டையிலுள்ள கட்சி அலுவலகத்தில் ஆட்சிமன்ற குழு கூடியது. வளர்மதி, முணுசாமி, மதுசூதனன், பன்னீர்செல்வம், எடப்பாடியார், வைத்திலிங்கம், தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள வந்தனர். ஜெயக்குமார், வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்களும் இருந்திருக்கிறார்கள்.
அதிகாரப்பூர்வமாக அமரும் முன் சின்னதாக ஒரு ஆலோசனையை முடித்துவிட்டு பின் ஆட்சிமன்றக்குழு கூட்ட வாயிலாக மதுசூதனனை வேட்பாளராக அறிவித்துவிட்டனர். ஜெயக்குமாருக்கு இது மிகப்பெரிய அடி.
’சிம்பிளாக சொல்வதென்றால் சசிக்கு எதிராகவே கொம்பு சிலுப்பும் ஜெயக்குமார், அவைத்தலைவரிடம் தோற்றுவிட்டார்.’ என்று கிண்டலடிக்கிறார்கள் ஜெயக்குமாரின் எதிரணியினர்.
.jpg)
மதுவுக்கு சீட் கொடுக்காவிட்டால் பெரும் பிரச்னையை உருவாக்கி பன்னீர் அணி நிச்சயம் பிரிந்துபோகும்! இப்போதுதான் சின்னம் கிடைத்து, தினகரனின் எம்.பி.க்களை இழுத்து ஒரு வழியாக தங்களின் நிலையை ஸ்டிராங்காக்கி இருக்கும் நிலையில் மீண்டும் பிரிவு நிகழ்ந்தால் கட்சி முடிந்தேபோகும், ஆட்சி அம்பேல் ஆகிவிடும் எனும் எண்ணத்தில்தான் எடப்பாடியார் இதை ஏற்றிருக்கிறாராம்.
ஆனாலும் வெறுப்பிலிருக்கும் ஜெயக்குமார் தரப்பின் உள்ளடி வேலைகளை தாண்டுவது மதுசூதனன்னுக்கு ஒரு பெரும் சவால்தான்! என்கிறார்கள்.
