OPS : மதுரை வந்த ஓபிஎஸ்..விமான நிலையத்தை ஆக்கிரமித்த அதிமுகவினர்..பொதுமக்கள் அவதி..
அதிமுக ஒருங்கிணைப்பாளராக பதவியேற்று மதுரைக்கு வந்த ஓபிஎஸ்சுக்கு பிரமாண்ட வரவேற்பை அளித்த அதிமுகவினர்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் ஒருங்கிணைப்பாளராக பதவியேற்ற பிறகு நேற்று முதல் முறையாக மதுரை வந்தார் ஓபிஎஸ். இதனால் அவருக்கு மிகவும் உற்சாகமான வரவேற்பு அளிக்கும் விதமாக பிரமாண்ட வரவேற்பினை அளித்தனர் அதிமுகவினர்.
ஓபிஎஸ் உடன் வந்த வாகனங்கள் வெளியே செல்லும் வழியில் இருபுறமும் மற்ற வாகனங்கள் செல்லாமல் அணிவித்து நூற்றுக்கணக்கான கார்கள் நின்றன.மேலும், விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் வழியிலும் அதிமுக கார்கள் அணிவகுத்து நின்றது. இதனால், விமான நிலையம் செல்லும் வழியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல முடியாமலும், வெளியிலிருந்து விமான நிலையம் உள்ளே செல்ல முடியாமலும் பயணிகள் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
இதேபோல், விமான நிலையத்திற்கு பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்லும் வழியிலும் அதிமுக தொண்டர்கள் நின்றதால் செல்ல முடியாமல் திக்கித் திணறி சென்றனர். தாரை தப்பட்டை முழங்க, யானை வரவேற்பளிக்க வந்த ஒ. பி. எஸ் தொண்டர்களுடன் உற்சாக போஸ் கொடுத்தார். இதனால் திரண்ட அதிமுக தொண்டர்களால் போக்குவரத்தை சீர்செய்ய போலீஸார் மிகவும் திணறினர். இதுமட்டுமல்லாமல், அதிமுக வாகனங்களுக்கிடையில் போலீஸாரின் வாகனமும் சிக்கியது
அதிமுக தொண்டர்கள் வரவேற்பால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது. பயணிகள் பலரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இனி வரும் காலங்களில் அரசியல் கட்சியினர் வரவேற்பு அளித்தால் விமான நிலையம் வெளியே இருக்கும், பெருங்குடி பகுதிகளில் வரவேற்பு அளித்தால் பொதுமக்கள் மற்றும் விமான பயணிகள் சிரமமின்றி செல்ல முடியும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.