காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 5வது நாளாக அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக எம்பிக்கள், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த 4 நாட்களாக அமளியில் ஈடுபட்டனர். ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி கூடுதல் நிதி ஒதுக்கக்கோரி தெலுங்குதேசம் கட்சி எம்பிக்களும், மற்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டதால் கடந்த 4 நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியதிலிருந்தே நாடாளுமன்ற நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில அரசுகளுடன் மத்திய அரசு இன்று ஆலோனை நடத்துகிறது. இதற்கிடையே 5வது நாளாக இன்றும் நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இரு அவைகளிலும் இன்றும் அமளியில் ஈடுபட வாய்ப்புள்ளதால், 5வது நாளாக இன்றும் நாடாளுமன்றம் முடங்கும் நிலை உள்ளது.