தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் மைத்ரேயன், ரத்தினவேல், அர்ஜுனன், லக்ஷ்மணன், இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி டி.ராஜா ஆகியோரின் பதவிக்காலம் இன்றுடன்  முடிவடைகிறது.

இதனையடுத்து மாநிலங்களவையில் மைத்ரேயன், ராஜா உள்ளிட்ட 5 பேருக்கும் பிரியாவிடை அளிக்கப்பட்டது. அப்போது மைத்ரேயன் உருக்கமான உரை ஒன்றை நிகழ்த்தினார்.

ஏறத்தாழ 14 ஆண்டுகாலம் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி இன்றுடன் ஓய்வுபெறும் எனக்கு தற்போது சூரியன் அஸ்தமிக்கும் நேரம். என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்ததற்காகவும், என்னை 3 முறை இந்த மன்றத்திற்கு அனுப்பியதற்காகவும் அன்பான தலைவரான ஜெயலலிதாவுக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  எனக்கு வழிகாட்டிய முன்னாள் நிதியமைச்சர் அன்பு சகோதரர் அருண் ஜேட்லிக்கு என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது மாநிலங்களவை கண்டுகொள்ளவில்லை. அதற்காக இரங்கலோ கண்டனமோ கூட தெரிவிக்கவும் இல்லை.

நாளை நான் இறந்துவிட்டால் கூட  இந்த அவை எனக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம் என்று உருக்கமாகக் குறிப்பிட்டார்.