அன்வர் ராஜா எம்.பி.யின் மகன் நாசர் அலி மீது பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் காரைக்குரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

ராமநாதபுரம் தொகுதி அதிமுக எம்.பி. அன்வர் ராஜாவின் மகன் நாசர். இவர் மீது சென்னையைச் சேர்ந்த ரொபினா என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக போலீசில் புகார் கூறியிருந்தார். அதில் புகாரில், நாசர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 3 மாத குடும்பம் நடத்தவிட்டு ஏமாற்றி விட்டதாக தெரிவித்துள்ளார்.

தன்னிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை அடகு வைத்து கடன் கொடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாசர் பல்வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. அத குறித்து நான் கேட்டபோது இதைக் கேட்க உனக்கு உரிமை இல்லை என்று என்னையும், எனது குடும்பத்தையும் தகாத வார்த்தைகளில் பேசினார். என்னைத் திருமணம் செய்து
கொள்ளுங்கள் என்று கூறியதை அடுத்து, எனது வீட்டுக்கு வருவதைக் குறைத்துக் கொண்டார்.

தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு தனது பணத்தை ஏமாற்றிவிட்டு தற்போது வேறு ஒரு பெண்ணை நாசர் திருமணம் செய்யவுள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நாசரிடம் கேட்டால், நாசரும் அவரது தந்தை அன்வர் ராஜாவும், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ரொபினா அந்த புகாரில் கூறியுள்ளார்.

இந்த நிலையில், காரைக்குடியில் நாசருக்கு திருமணம் நடக்க இருப்பதாக ரொபினாவுக்கு தகவல் கிடைத்து அங்கு சென்றார். அப்போது அங்கு கூடியிருந்த ஜமாத்தார் முன்னிலையில் ரொபினா கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். இது குறித்து காரைக்குடி போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் எம்.பி. அன்வர் ராஜா மகன் நாசர் அலி மீது வன்கொடுமை செய்தல், பணத்தை ஏமாற்றுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 14 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.