Asianet News TamilAsianet News Tamil

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரிசையில் ஈ.பி.எஸ்! மீண்டும் ஒற்றைத் தலைமையை நோக்கி அ.தி.மு.க!

அ.தி.மு.கவில் முழு அதிகாரம் கொண்ட தலைவராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவெடுத்து வருவதாக அக்கட்சி வட்டாரம் மட்டும் அல்லாமல் எதிர்கட்சியினரும் பேச ஆரம்பித்துள்ளனர்.
 

admk moving towards single leadership
Author
Tamil Nadu, First Published Oct 28, 2018, 11:24 AM IST

அ.தி.மு.கவில் முழு அதிகாரம் கொண்ட தலைவராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவெடுத்து வருவதாக அக்கட்சி வட்டாரம் மட்டும் அல்லாமல் எதிர்கட்சியினரும் பேச ஆரம்பித்துள்ளனர்.

    கடந்த 2011ம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக பதவி ஏற்றவர் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவருக்கு அமைச்சர்கள் வரிசையில் கடைசியில் இடம் கொடுக்கப்பட்டிருக்கும். முதலமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றதை தொடர்ந்து எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் எடப்பாடி பழனிசாமி கடைசி வரிசையில் இருப்பதை சுட்டிக்காட்டி கடைசி பெஞ்ச் மாணவன் சாதிப்பதை யாராலும் தடுக்க முடியாத என்கிற மீம்ஸ் கடந்த ஆண்டு முதல் வலம் வந்து கொண்டிருக்கிறது.

   உண்மையும் கூட அப்படித்தான், 2011 முதல் 2016 வரை நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவிற்கு மட்டும் அல்ல சசிகலாவுக்கும் கூட நம்பகத்தன்மை கொண்ட நபராக நடந்து கொண்டார். இதனால் தான் 2016ம் ஆண்டு மீண்டும் அமைந்த ஜெயலலிதா அமைச்சரவையில் அதிக பசை கொண்டதாக கூறப்படும் பொதுப்பணித்துறையும் எடப்பாடி பழனிசாமி வசம் கொடுக்கப்பட்டது.

admk moving towards single leadership

   இடைப்பட்ட காலத்தில் சசிகலாவின் நம்பர் ஒன் நம்பிக்கையாக எடப்பாடி பழனிசாமி வலம் வந்தார். இதனால் தான் முதலமைச்சர் பதவியை அமைச்சரவையில் அடுத்தடுத்த இடங்களில் இருந்தவர்களுக்கு கொடுக்காமல் ஏதோ ஒரு இடத்தில் இருந்த எடப்பாடியிடம் ஒப்படைத்தார் சசிகலா. சசிகலா சிறைக்கு சென்ற பிறகு அ.தி.மு.கவின் பொறுப்புகளை கவனித்து வந்த தினகரனுடன் இணக்கமாக இருந்தார் எடப்பாடி.

   தினகரன் ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட தலையில் தொப்பியை அணிந்து கொண்டு சென்று முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அதன் பிறகு டெல்லியின் குணம் அறிந்து தினகரனை ஓரம் கட்டியதுடன் ஓ.பி.எஸ்சையும் சமாளித்து இரு அணிகளாக இருந்த அ.தி.மு.கவை ஓரணியாக்கியதுடன் முதலமைச்சர் பதவியையும் கெட்டியாக பிடித்துக் கொண்டார் எடப்பாடி.

admk moving towards single leadership

   தினகரன் மீண்டும் விஸ்வரூபம் எடுத்த போது சிறிதும் சலனப்படாமல் சிறிதும் அச்சப்படாமல் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ய எடப்பாடி ஒப்புக் கொண்டது அவரது அரசியல் வாழ்வின் மிக முக்கியமான தருணம் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு டெல்லியில் இருந்து அவ்வப்போது வருமானவரித்துறை, சி.பி.ஐ மூலமாக கொடுக்கப்படும் குடைச்சல்களை கூட மிக லாவகமாக எடப்பாடி கையாண்டவிதம் கட்சிக்காரர்கள் பலரையும் கவர்ந்தது.

   அதிலும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை டி.ஜி.பி ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் பதவிகளில் இருந்தவர்களின் வீட்டிற்குள் சி.பி.ஐ நுழைந்த போதும் கூட இரும்பு போல் நின்று அந்த பிரச்சனையையும் கூட சமாளித்து அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படாமல் எடப்பாடி காத்துவிட்டதாக முக்கிய நிர்வாகிகள் பேச ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் 18 எம்.எல்.ஏக்கள் வழக்கிலும் அரசுக்கு சாதகமான வந்த தீர்ப்பிற்கு காரணம் எடப்பாடியின் வியூகம் என்றே பலரும் கருதுகின்றனர்.

admk moving towards single leadership

   மேலும் அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பி.எஸ், கடந்த ஆண்டு தினகரனை சந்தித்ததாக வெளியான தகவல் எடப்பாடி மீதான கட்சிக்காரர்களின் மதிப்பை அதிகரிக்கச் செய்தது. அதாவது தினகரன் தெரிந்தோ தெரியாமலோ அ.தி.மு.கவை ஒற்றைத் தலைமையை நோக்கி நகர வைத்துள்ளார். அதாவது ஓ.பி.எஸ்சை சந்தித்த ரகசியத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவர் மீது ஒரு கட்சிக்காரர்களுக்கு அதிருப்தி ஏற்பட வைத்தது எடப்பாடிக்கு சாதகமாகிவிட்டது.

admk moving towards single leadership

  ஒரே நேரத்தில் டெல்லி, தி.மு.க., தினகரன் என மூன்று பேரையும் சமாளித்து ஆட்சியை தொடர்ந்து வரும் எடப்பாடிக்கு பின்னால் கட்சியின் அனைத்து மட்டத்தை சேர்ந்தவர்களும் அணிவகுக்க ஆரம்பித்துள்ளனர். இதன் மூலம் அ.தி.மு.க மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்த போது இருந்த ஒற்றைத் தலைமையை நோக்கி நகர்வதாகவே தெரிகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios