ADMK MLAs are self-assured Dinakaran Plan like Koovathur

தட்ட வேண்டிய இடத்தில் தட்டினால், கொட்ட வேண்டியது கொட்டும் என்பது, திரை மறைவில் இருந்து கொண்டே தமிழக அரசியலை 30 வருடங்களுக்கும் மேல் ஆட்டிப்படைத்த சசிகலா குடும்பத்திற்கு தெரியாதா என்ன?

மக்கள் ஆதரவு துளி கூட தேவை இல்லை. அது நமக்கு கிடைக்கவும் கிடைக்காது. அதனால், இருக்கும் நான்காண்டு காலத்தையும், எப்படி தமது கட்டுப்பாட்டில் கொண்டுவருவது? என்று கணக்கு போட்டு இறங்கியது சசிகலா குடும்பம்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை செல்ல நேர்ந்ததால், எடப்பாடியை, ரப்பர் ஸ்டாம்ப் போல முதல்வராக வைத்து, அவரை ஆட்டி படைக்க, தினகரனுக்கு துணை பொது செயலாளர் பதவியும் கொடுத்து சென்றார் சசிகலா.

சசிகலா குடும்பத்தை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று நினைத்த மோடி, பன்னீரை போலவே, எடப்பாடியையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

இதை தெளிவாக உணர்ந்த தினகரன், திகார் சிறையில் இருக்கும்போதே, தமது ஆதரவாளர்கள் மூலம், எடப்பாடி அதிருப்தி எம்.எல்.ஏ க்கள் அனைவரையும், தமது அணிக்கு கொண்டு வந்துவிட்டார்.

கூவத்தூர் பாணியில் பொழியப்பட்ட பணமழை, எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ க்களை கூட தினகரன் பக்கம் இழுத்து வந்து விட்டது. இன்னும் பல எம்.எல்.ஏ க்கள் தினகரன் வலையில் விழுந்த வண்ணம் உள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க, இன்னும் இரண்டு மாதம் அவகாசம் தருவதாக கூறிய தினகரன், இப்படி எம்.எல்.ஏ க்களை இழுத்து, நெருக்கடி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? என்றும் ஒரு கேள்வி எழுந்துள்ளது.

சசிகலா குடும்பம் இல்லாமல், அதிமுகவால் இயங்க முடியாது. அதேபோல், சசிகலா குடும்பத்தின் தயவு இல்லாமல் அதிமுக சார்பில் யாரும் முதல்வராக தொடர முடியாது என்பதை உணர்த்தவே, இப்படிப்பட்ட அதிரடிகளை அரங்கேற்றி வருகிறார் தினகரன்.

ஆனால், தினகரானால், எத்தனை எம்.எல்.ஏ க்களை இழுத்தாலும், ஆட்சியை கவிழ்க்க முடியுமே ஒழிய, அவரால், இன்னொருவரை முதல்வராக்க முடியாது என்பதில் எடப்பாடி தரப்பு உறுதியாக இருக்கிறது.

தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தால், முதல்வர் மற்றும் அமைச்சர்களை, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்று தினகரன் நினைக்கிறார்.

நெருக்கடி காரணமாக ஆட்சி கவிழ்ந்தால், எங்களுக்கு பதவிதான் போகும். எங்களை விட சசிகலா குடும்பத்திற்குதான் பாதிப்பு அதிகம் என்று முதல்வர் எடப்பாடிக்கு நெருக்கமான சிலர் கூறுகின்றனர்.