அரசு விழாவில், மக்கள் பிரதிநிதியை அவமதித்ததாக புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மீது, அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன், சபாநாயகர் வைத்தியலிங்கத்திடம் உரிமை மீறல் புகார் கொடுத்துள்ளார். அப்போது அதிமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் உடனிருந்தனர்

அரசு நிகழ்ச்சியில் அதிமுக எம்எல்ஏ அன்பழகன் அரசு விழா மேடையில் பேசியபோது மைக்கை ஆளுநர் அணைத்தது உரிமை மீறல் என புகார் கூறப்படுகிறது. 

புதுச்சேரி உப்பளத்தில் நேற்று காலை ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 150-வது காந்தி ஜெயந்தி விழா நடத்தப்பட்டது. இதில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, அதிமுக, காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில், அதிமுக எம்.எல்.ஏ., அன்பழகன், தனது தொகுதி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார். 

தனது தொகுதியில் அரசு திட்டங்கள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், ஒன்றுமே நிறைவேற்றப்பட்டவில்லை என்றும் கூறினார். இதன் பின்னர், எம்.எல்.ஏ. அன்பழகனிடம் சென்ற ஆளுநர் கிரண்பேடி, அரசு விழாவில், தொகுதி நிலவரம் பற்றி பேச வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து மேடையிலேயே ஆளுநர் கிரண்பேடியுடன் எம்.எல்.ஏ. அன்பழகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

"

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்எல்ஏ பேசிக்கொண்டிருக்கும் போது, நீங்கள் எப்படி மைக் ஆப் செய்யலாம். இது தவறான செயல் என்றும், இது குறித்து உரிமை மீறல் புகார் கொடுக்கப்பட இருப்பதாகவும் நேற்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். 

இந்த நிலையில், இன்று புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் வைத்தியலிங்கத்தை சந்தித்த, அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன், அரசு விழாவில் மக்கள் பிரதிநிதியை அவமதித்ததாக புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மீது புகார் மனு ஒன்றை கொடுத்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட சபாநாயகர் வைத்தியலிங்கம், ஆளுநர் கிரண்பேடி மீதான உரிமை மீறல் புகார் குறித்து ஆய்வு செய்யப்படும், புகாரை, முழுமையாக ஆய்வு செய்த பிறகே உரிமை மீறல் குழுவுக்கு அனுப்ப முடியும் என்று கூறினார்.