தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தயாராகிவருகின்றன. முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக ஆகியவை பூத் கமிட்டி அமைப்பது, அவர்களுடன் ஆலோசனையில் ஈடுபடுவது என ஈடுபட்டுவருகின்றன. அதிமுக மாவட்டந்தோறும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டங்களை நடத்திவருகின்றன. அக்கட்சி சார்பில் மதுரையில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ.வும் மதுரை புறநகர் மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா பங்கேற்றார்.


இக்கூட்டத்தில் அவர் பேசும்போது, “திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நல்லவரும் இல்லை, வல்லவரும் இல்லை. அவருடைய தந்தை கருணாநிதி மிகவும் வல்லவர். ஆனால், நல்லவர் இல்லை. மு.க. ஸ்டாலின் இந்த இரண்டுமே இல்லை. கருணாநிதி உயிருடன் இருந்தபோதே மு.க. ஸ்டாலின் முதல்வர் ஆகியிருக்க வேண்டும். ஆனால், அவர் முதல்வர் ஆகவில்லை. ஏனென்றால் மு.க. ஸ்டாலின் ராசி அப்படி.
இனிமேலும் மு.க. ஸ்டாலினால் முதல்வராக முடியாது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உண்மையான விவசாயி. அதை நிரூபிக்கத்தான் பச்சை துண்டால் தலைப்பாகை கட்டி விவசாயிகளுடன் இருக்கிறார். ஆனால், மு.க. ஸ்டாலினால் அவரை போல் தலைப்பாகை கட்ட முடியுமா? வேண்டுமென்றால் தலை முடியை அலங்காரம் செய்துகொள்ளலாம். அவரால் அது மட்டும்தான் முடியும்” என்று ராஜன் செல்லப்பா பேசினார்.