தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளிலும் 18 தொகுதிகளில்  இடைத் தேர்தலும்  கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது. இது தவிர வரும் மே 19 ஆம் தேதி 4 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில்  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல்,  இடைத் தேர்தலில் எங்கள் கட்சியின் 22 பேரும் வெற்றிபெற்று வந்தால் அதிமுகவில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துதான் ஆட்சியைப் பிடிப்போம். அதிமுகவில் உள்ள எங்களின் ஸ்லீப்பர் செல்கள் தொடர்ந்து எங்களிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஸ்லீப்பர் செல்கள் அமைச்சர்களாகக் கூட இருக்கிறார்கள்” என்றும் தெரிவித்தார்.

இந்த ஸ்டேட்மெண்ட்  முதலமைச்சர் எடப்பாடிக்கு கடும் அதிர்ச்சியைத்  தந்தது. ஏற்கனவே தினகரன் தனி அணியாக செயல்படத் தொடங்கியதில் இருந்து ஸ்லீப்பர் செல் என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகிறார்.

இந்நிலையில்தான் தமிழக உளவுத்துறை  ஸ்லீப்பர் செல்களாக இருக்கிற அமைச்சர்கள் தேர்தலில் தினகரனுக்கு தேர்தல் நிதி கொடுத்திருக்கிறார்கள் என்ற விவரத்தை கூறியிருக்கிறார்கள் .

அதிமுகவைப் பொறுத்தவரை நடந்து முடிந்த தேர்தலில் நிர்வாகிகளிடம் கொடுக்கப்பட்ட பணம் சரியாக கொண்டு போய் சேர்க்கப்படவில்லை என்ற புகார்கள்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சி அடையச் செய்துள்ள நிலையில் உளவுத் துறையின் இந்த தகவல் அவருக்கு மேலும் அதிர்ச்சி அளித்துள்ளது.

எட்டு அமைச்சர்களை தினகரனோடு  தொடர்பில்  இருப்பவர்கள் என்றும் அவர்களை தீவிர கண்காணிப்பில் வைத்திருக்கிறார்  எடப்பாடி. ஆனால் அந்த 8 பேரும் தொடர்ந்து தினகரனுடன் டச்சில் இருப்பதோடு  தேர்தல் நிதியும் அள்ளி வழங்கியுள்ளனர்.

தேர்தல் முடிவுக்குப் பின் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், அப்போது தினகரனின் தயவு நமக்குத் தேவை என்ற கணக்கு போட்டுதான் அமைச்சர்கள் தேர்தல் நிதி கொடுத்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார் போன்றவர்கள்தான் தினகரனுக்கு அதிக நிதி கொடுத்திருக்கிறார்கள் என்ற தகவலும் முதலமைச்சருக்கு  தகவல் போயுள்ளதால் அவர் செம கடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.