ADMK Ministers raise Question against MK Stalin

அதாகப்பட்டது!... தி.மு.க.வின் செயல் தலைவரான ஸ்டாலின் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் தமிழகத்தில் மதுக்கடைகள் புதிது புதிதாக திறக்கப்பட்டுக் கொண்டே போவதாகவும், தமிழகம் தள்ளாடுகிறது, தமிழ் பெண்கள் திண்டாடுகிறார்கள் என்று அதில் கசிந்துருகி கண்ணீர் வடித்திருக்கிறார் இப்படி...

“2016 தேர்தல் அறிக்கையில் ‘படிப்படியாக டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும்’ என்று அறிவித்திருந்த அ.தி.மு.க. ஓட்டுக்களை வாங்கி, ஆட்சிக்கு மீண்டும் வந்ததும் தனது புத்தியை காட்டுகிறது. தமிழகமெங்கும் புதிதுபுதிதாக மதுக்கடைகளை துவங்கிக் கொண்டே இருக்கிறார்கள். 

இந்த மாநிலத்தை மதுவால் மதிமயக்கத்திலேயே தள்ளாடியபடி வைத்திருக்க முனைகிறது குதிரை பேர அரசு. 

உச்சநீதிமன்றமே இதற்கெல்லாம் கடிவாளம் போட்டாலும் கூட நகராட்சி, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை மாற்றி மாற்றியமைத்து குறுக்கு வழிகளை கண்டுபிடித்து மது விற்பனையை பெருக்கிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த மதுக்கடைகளுக்கு எதிராக் தாய்மார்கள் போராடி போராடி ஓய்ந்து கிடக்கின்றனர். மதுவில் கணவன் மூழ்குவதால் கண்ணீரில் குடும்பம் மூழ்குவதை கண்டு வருந்தி அழுகிறார்கள். 

தமிழக தாய்மார்களை அவதியுற வைக்கும் இந்த குதிரை பேர அரசுக்கு மன்னிப்பே கிடையாது.” என்று நீள்கிறது அந்த அறிக்கை. 

செயல் தல!யின் இந்த கண்ணீர் அறிக்கையை எடுத்து வைத்து அவரை வகையாக விமர்சிக்க துவங்கியிருக்கின்றனர் இணைய அ.தி.மு.க. பிரிவினர். அதில் ஒரு விஷயம் மிக முக்கியமானது...

அதாவது தி.மு.க.வின் பெரும்புள்ளியும், பெரும் செல்வந்தரும், கருணாநிதி மற்றும் ஸ்டாலினுக்கு மிக நெருங்கியவருமான ஜெகத்ரட்சகன் மது தயாரிப்பு ஆலையை நடத்தி வருகிறார். இதை குறிப்பிட்டு காட்டியிருக்கும் அ.தி.மு.க. டீம் ‘உங்க கட்சிப்புள்ளி சரக்கை ஆலை போட்டு காய்ச்சி சம்பாதிக்கிறார். அந்த காசையும் வாங்கி உங்க கட்சி வண்டி ஓடுது. அவரை திருந்தச்சொல்லுங்க முதல்ல, அல்லது அவரை திருத்துங்க முதல்ல. ஒருவேளை ஜெகத்ரட்சகன் மது தயாரிப்பை நிறுத்தாட்டி, நீங்க அவரை கட்சியிலிருந்து நீக்குங்க. இன்னும் உங்க கட்சிப் புள்ளிங்க யாரெல்லாம் மது ஆலை வெச்சிருக்காங்கன்னு தோண்டி எடுத்து விபரங்களை தருவோம்! 

நீலி கண்ணீர் வடிச்சு மக்களை ஏமாத்துற காலமெல்லாம் மலையேறி போச்சு. என்னமோ உங்க ஆட்சியில பூரண மது விலக்கு இருந்த மாதிரி சீன் போடுறீங்க! தமிழக சாலைகளில் சாராய ஆறை ஓடவைத்து அதில் அரசியல் செய்தது யாரென்று மக்களுக்கு தெரியும். 
காய்ச்சினவன் புண்ணியவான், விற்கிறவன் மட்டும் பாவியா என்னாங்க ஸ்டாலின் நியாயமிது?” என்று பொளந்து கட்டுகிறார்கள். 

இதற்கு என்ன பதில் தரப்போகிறது ஸ்டாலின் வட்டாரம்?