admk ministers message to rajini
ரஜினி அரசியலுக்கு வருவது உறுதியாகி விட்டது. அதனால், அவருக்கு நெருக்கமான முக்கிய அரசியல் புள்ளிகள், மூத்த பத்திரிகையாளர்கள் பலருடன், அவர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இது ஒருபுறம் இருக்க, ரஜினி கட்சி ஆரம்பித்தால், அதில் இணைந்து பணியாற்ற,தென் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக அமைச்சர்கள் சிலர், தயாராக இருப்பதாக, ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகள் மூலம் தூது விட்டுள்ளனர்.
தங்களை ஊழலில் சிக்காத அமைச்சர்கள் என்றும், உங்களுடைய கொள்கைகளை ஏற்று உங்களோடு அரசியலில் பயணிக்க தயாராக இருக்கிறோம் என்றும் அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

அதை கேட்டு, ஊழல் இல்லாத அமைச்சர்கள் கூட இருக்கிறார்களா? என்று, ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் மிகவும் ஆர்வமாக கேட்டிருக்கிறார் ரஜினி. அதற்கு, அப்படி அல்ல, அடாவடியா ஊழல் செய்யாததை, அப்படி செல்கிறார்கள் என்று பதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, ரஜினியின், வலையில் ஏற்கனவே விழுந்த சென்னையை சேர்ந்த ஒரு கல்வி தந்தை, வடமாவட்டங்களில் உள்ள தமது சமூகத்தை சேர்ந்த ஆதரவாளர்களை எல்லாம், தமது வீட்டுக்கு வரவழைத்து தினமும் ஆலோசனை நடத்தி வருகிறார் என்று சொல்லப்படுகிறது.
அவருக்கு நெருக்கமான, கிரிவல நகரை சேர்ந்த கல்வி தந்தை ஒருவரும், மாவட்டம் முழுவதும் உள்ள தமது ஆதரவாளர்களுடன், தினமும் தொடர்ந்து பேசி வருகிறார்.
இதை கண்ட, மேலும் இரண்டு கல்வி தந்தைகளும், ரஜினியின் கட்சியில் சேர்ந்து சமூக சேவையாற்ற, ரஜினியிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு காத்திருக்கிறார்கள்.
எங்களுக்கு பணம் ஒரு பிரச்சினையே அல்ல. ஊடகமும் கையில் இருக்கிறது. மக்களவை அல்லது மாநிலங்களவையில் மட்டும் ஒரு எம்.பி.பதவி கிடைத்தால் போதும். தேர்தலில் பல தொகுதிகளுக்கு செலவு செய்ய காத்திருக்கிறோம் என்று அவர்கள் ரஜினிக்கு சொல்லி அனுப்பி இருக்கிறார்கள்.

பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் அரசிலுக்கு வருபவர்களை சேர்க்க மாட்டேன் என்று ரஜினி கூறியதால், தங்களுக்கு ரஜினி கட்சியில் ஒரு முக்கிய பதவி கிடைக்கும் என்று, அவர்கள் இருவரும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்களாம்.
ஆனால், இருவருமே தங்கள் கல்வி நிறுவனங்களுக்காக பொது சொத்துக்களை சூறையாடிய குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் என்பதால், அவர்களின் கோரிக்கையை காத்திருப்போர் பட்டியலில் வைத்து விட்டு, காலா பட ஷூட்டிங்குக்காக மும்பை சென்று விட்டாராம் ரஜினி.
