சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் அதிமுகவின் அவசர உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இக்கூட்டத்துக்கு தலைமை தாங்கினர். அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் பலரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
கூட்டத்துக்கு  தலைவர்கள் வரும்போதே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் வாழ்த்து கோஷங்கள் மூலம் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், அம்மாவின் அரசியல் வாரிசு வாழ்க, நாளைய முதல்வர் வாழ்க’ என்று வாழ்த்து கோஷங்களை எழுப்பினார்கள். இதேபோல எடப்பாடி பழனிச்சாமி வந்தபோது அவருடைய ஆதரவாளர்கள்,  தமிழகத்தின் நிரந்தர முதல்வர் வாழ்க, தமிழகத்தின் விடிவெள்ளி வாழ்க என்று பதில் கோஷம் போட்டு அந்த இடத்தையே சூடாக்கினார்கள்.


கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக சூடான விவாதம் நடந்ததாகக் கூறப்படுகிறது. முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவகாரத்தில் அமைச்சர்கள் கடந்த மாதம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் அமைச்சர்கள் குழு தனித்தனியாக ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. நேற்றைய கூட்டத்திலும் அமைச்சர் தங்கமணி தேர்தலுக்கு முன்பாக முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார்.
இதேபோல கடந்த 2017-ம் ஆண்டில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைந்த பிறகு, வழிகாட்டு குழு அமைப்பது தொடர்பாகப் பேசப்பட்டது. அந்தக் குழுவை ஏன் அமைக்கவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் நேரடியாகவே கேள்வி கேட்டு அதிரடித்தார். ஆனால், அந்தக் குழுவை அமைக்க முடியாது என்றும் எனக்கு வேண்டியவர்களில் யாரை அக்குழுவில் பணியமர்த்துவது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் தந்ததாக கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் இதே கருத்தை வலியுறுத்தி பேசியிருக்கிறார்கள். இதனையடுத்து மூத்த நிர்வாகிகள் இரு தரப்பையும் சமரசம் செய்து வைத்ததோடு, இதுதொடர்பாக கட்சியின் செயற்குழுவில் முடிவு செய்யலாம் என்று பேசி தற்போதைக்கு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.


இதனையடுத்து வரும் 28-ம் தேதி கட்சி அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டுவிட்டு கூட்டம் கலைந்து சென்றது. வரும் 28-ம் தேதி நடைபெற உள்ள செயற்குழு கூட்டத்திலும் முதல்வர் வேட்பாளர், வழிகாட்டுதல் குழு அமைக்கும் விவகாரம் பூதாகரமாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.