அரசு விழாவில் பங்கேற்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு வருகை தந்தார். கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில், அமித்ஷாவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். அமித்ஷா பேசும்போது, எடப்பாடி பழனிச்சாமி அரசு மீண்டும் தொடரும் என்று நம்புவதாகக் குறிப்பிட்டார். 
இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு அமித்ஷா, எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலுக்கு சென்றார். அவரைத் தொடர்ந்து ஹோட்டலுக்கு எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்களும் வருகை புரிந்தனர். அங்கு அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர் செல்வம் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.


அரசு விழாவிலேயே தேர்தல் கூட்டணி உறுதியான நிலையில், தேர்தல் பிரசார வியூகம், தேர்தல் தொகுதி பங்கீடு உள்பட முக்கிய விவகாரங்கள் குறித்து அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று இரவு சென்னையிலேயே தங்கும் அமித்ஷா, தமிழக பாஜகவினருடனும் ஆலோசனை நடத்த உள்ளார். அதிமுக-பாஜக தலைவர்களின் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.