Asianet News Tamil

#BREAKING அதிமுக நுரை பூ அல்ல, ஊதி விளையாட... திமுகவை பகிரங்கமாக எச்சரித்த ஓபிஎஸ் - ஈபிஎஸ்...!

திமுகவை வன்மையாக கண்டித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் . 

ADMK Leaders Edappadi palanisawami and O pannerselvam slams DMK
Author
Chennai, First Published Jun 17, 2021, 4:57 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே 10 ஆண்டு காலம் இல்லாத மின்வெட்டும், கருத்து சுதந்திர மீறலும் ஒரு மாத கால திமுக ஆட்சியில் தலை விரித்தாடுவதாக அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் . அதில்,  ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தங்கள் வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற்று நிம்மதியுடன் வாழ வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் பேரியக்கத்தைத் தோற்றுவித்து, அவர் நினைத்ததை செயல்படுத்திக் காட்டினார்.

அதே போல், புரட்சித் தலைவரின் வழித்தோன்றலாகத் திகழ்ந்த இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களும், மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனைகளை நிகழ்த்திக் காட்டினார்கள். நம் இருபெரும் தலைவர்களும் பல்வேறு சோதனைகளையும், வேதனைகளையும், இன்னல்களையும், தியாகங்களையும் சந்தித்தே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கட்டிக் காத்து ஒரு மாபெரும் இயக்கமாக வளர்த்து வந்துள்ளார்கள். அந்த வகையில், கழகத்தையும், தொண்டர்களையும் நாளும், பொழுதும் கண்எனக் காத்து வருகிறோம்; தொடர்ந்து தொய்வில்லாமல் மக்கள் பணிகளை ஆற்றி வருகிறோம்.

இந்நிலையில், ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து திமுக-வின் இயற்கை குணாதிசயங்கள் தமிழ் நாட்டு மக்களை வாட்டி, வதைக்கத் தொடங்கிவிட்டன. பத்தாண்டு காலம் தலைகாட்டாத மின்வெட்டு இப்பொழுது மாநிலம் முழுவதும் தலைவிரித்து ஆடுகிறது. பட்டப் பகலில் சட்டவிரோதச் செயல்களில் எவ்வித கூச்சமோ, அச்சமோ இன்றி திமுக-வினர் வெட்ட வெளிகளிலும், வீதிகளிலும் முழு மூச்சில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு அலுவலகங்கள் சுதந்திரமாக பணிசெய்ய முடியாத அளவுக்கு ஆளும் கட்சியினரின் தலையீடும், உருட்டல் மிரட்டல்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

ஆட்சிக்கு வந்து ஒரு மாதமே முடிந்த நிலையில், வாக்களித்த மக்களை வஞ்சிப்பதில் முதலிடம் பெற்ற ஆட்சியாக திமுக ஆட்சி தனது இருப்பையும், இயல்பையும் காட்டிக் கொள்கிறது. ஜனநாயகத்தின் ஆணிவேராக விளங்கக்கூடிய கருத்து சுதந்திரத்தை நசுக்குவதில் திமுக-வினர் தங்களது முழு வரம்பு மீறலையும் மாநிலமெங்கும் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆளும் கட்சியினரின் தவறுகளையும், தலையீடுகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் அடிப்படை அரசியல் கடமையில் ஈடுபட்டிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் மீது வன்முறைத் தாக்குதல்களை ஏவிவிடுவதில் திமுக-வினர் மாநிலத்தின் பல இடங்களில் தீவிரமாக உள்ளனர். 

காவல் துறையினரின் துணைகொண்டு கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் மீது வன்முறைத் தாக்குதல்களையும், பொய் வழக்கு போடும் அடாத செயல்களிலும் திமுக-வினர் ஈடுபடும். நிகழ்வுகள் பல இடங்களில் நடந்து கொண்டிருக்கிற திமுக-வினரின் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எங்களுடைய கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். ஆற்ற வேண்டிய பணிகள் ஆயிரம் இருக்கையில், அராஜகத்திற்குத் துணைபோகும் செயலில் ஆளும் கட்சியினர் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருப்பது மக்களுக்கு செய்யும் துரோகமே ஆகும்.

பழிவாங்கும் நோக்கத்தோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மீதும்; அநீதிகளையும், அராஜகங்களையும், ஆட்சியின் அலங்கோலங்களையும் தட்டிக் கேட்கும் கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் மீதும், பொய் வழக்கு போடுவதும், தாக்குதல் நடத்துவதுமான செயல்களை தி.மு.க. தலைமை தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பாதிக்கப்படக்கூடிய தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூராட்சிக் கழக நிர்வாகிகளோடும், கழக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளோடும் கலந்துபேசி அவர்களுக்கு தகவல் தெரியப்படுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் எதிர்த்துக் களமாடுவதற்கு கழக வழக்கறிஞர் பிரிவு தயார் நிலையில் இருக்கிறது. அதை, கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்தவர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கழக வழக்கறிஞர் பிரிவு எதிர்க்கட்சி என்ற பிரதானமான வாய்ப்பைப் பயன்படுத்தி, சட்ட நெருக்கடியை திமுக-விற்கும், அதன் தலைமையிலான அரசிற்கும் தருவதற்கு தயாராக இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புதுவெள்ளத்தில் மிதந்துவரும் நுரை பூ அல்ல ஊதி விளையாட. தொண்டர்களின் வீரத்திலும், தியாகத்திலும் விளைந்திட்ட நெருப்பில் பூத்த மலர். எந்த அச்சுறுத்தலும் எங்கள் இயக்கத்தை நெருங்க முடியாது. அமைதியாகவும், பொறுப்புணர்ச்சியுடனும் ஜனநாயகக் கடமையாற்றி வரும் கழகத்தினரையும், பல்வேறு அணியினரையும், தகவல் தொழில்நுட்பப் பிரிவினரையும் அச்சுறுத்துவதால் கழகம் அடங்கிப் போகும் என்று தப்புக் கணக்குப் போடாமல், தலைகால் தெரியாமல் ஆட்டம் போடாமல், நல்லாட்சி நடத்துவதில் கருத்தையும் செலுத்துவது, வாக்களித்த மக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை கடமை திமுக-வுக்கு இருப்பதை நினைவில்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios