மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என முதலமைச்சர்  நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குடியுரிமை திருத்தச்  சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் பங்கேற்ற பேரணியும் நடத்தப்பட்டது.  இதில் காங்கிரஸ் உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் பங்பேற்றன.

இதனிடையே இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக புதுச்சேரி மாநில பாஜக சார்பில் நேற்று  விளக்க பேரணி நடத்தப்பட்டது.சுதேசி பஞ்சாலையில் இருந்து தொடங்கிய பேரணிக்கு  பாஜக மாநிலத் தலைவரும், நியமன எம்எல்ஏவுமான சாமிநாதன் தலைமை தாங்கினார். 

இதில்  கூட்டணி கட்சிகளான பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். பேரணி அண்ணா சாலை, நேருவீதி வழியாக சென்று, இறுதியில் தலைமை தபால் நிலையம் அருகே நிறைவடைந்தது.

இதனிடையே குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பாஜக சார்பில் நடைபெற்ற பேரணியில் கூட்டணியில் உள்ள பிரதான எதிர்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதிமுக கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர் .

இதில் கடுப்பான புதுச்சேரி மாநில பாஜக தலைவர்கள் இது குறித்த டெல்லி தலைவர்களிடம் புகார் அளித்துள்ளனர்.