மீண்டும் நிறைவேற்றிய அனுப்பிய தீர்மானத்தை ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பும்பட்சத்தில் அதை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொள்வாரா?  இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில் கூற வேண்டும்.

வேண்டாத கிரகங்கள் எல்லாம் நம்மை பிரிந்த பிறகு, சுதந்திரமாக, நல்ல சகுணத்தில் தேர்தலைச் சந்திக்க இருக்கிறோம் என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 அன்று நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் வேட்பு மனுத் தாக்கல், வேட்பாளர் இறுதிப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. 12,893 உள்ளாட்சிப் பதவிகளுக்காக சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டியில் இறங்கியுள்ளனர். வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், திமுக கூட்டணி, அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, அமமுக, மநீம உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். திருச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பல்வேறு இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

ஸ்ரீரங்கத்தில் நடந்த அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் ஓ.எஸ்.மணியன் பேசுகையில், “ நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் யாரும் நினைத்துப் பார்க்காத வெற்றியை அதிமுக பெற உள்ளது. ஏனெனில், பொங்கல் பரிசுத் தொகுப்பு உள்பட பல்வேறு விவகாரங்களில் ஆளுங்கட்சியை அனைத்துத் தரப்பு மக்களும் விமர்சனம் செய்யத் தொடங்கிவிட்டனர். இந்த சூழ்நிலையில்தான் தேர்தல் நடைபெறுகிறது. அதனால், அதிமுக நிச்சயம் வெற்றி பெறும். வழக்கமாக ஜாதகம் பார்க்கும்போது சனி, கேது என வேண்டாத கிரகங்கள் இருப்பதாக ஜோதிடர் நம்மிடம் கூறுவார்.

தற்போது அந்த வேண்டாத கிரகங்கள் எல்லாம் நம்மை பிரிந்த பிறகு, சுதந்திரமாக, நல்ல சகுணத்தில் தேர்தலைச் சந்திக்க இருக்கிறோம். இது, இன்னொரு வகையில் அதிமுகவுக்கு வெற்றி ஆகும். நீட் தேர்வு கூடாது என்பதுதான் அதிமுகவின் கொள்கை. ஆனால், நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களுக்கு சரியான தெளிவை ஏற்படுத்த திமுக அரசு முன் வர வேண்டும். தமிழக சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் கேட்க நினைத்த 2 கேள்விகளை நான் இங்கு கேட்க விரும்கிறேன்.

இந்தியாவில் நீட் தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்ட நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை நீதிமன்றம் ஏற்கவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் அரசு என்ன செய்யப் போகிறது? ஏற்கெனவே அனுப்பிய நீட் விலக்குக் கோரும் சட்டப்பேரவைத் தீர்மானத்தை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பிவிட்டார். இப்போது ஆளுநர் திருப்பி அனுப்பியதையடுத்து, மீண்டும் நிறைவேற்றிய அனுப்பிய தீர்மானத்தை ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பும்பட்சத்தில் அதை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொள்வாரா? இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில் கூற வேண்டும்” என்று ஓ.எஸ். மணியன் பேசினார்.