admk is the second richest regional party in india

இந்தியாவின் மிகப் பணக்கார பிராந்திய கட்சியாக இருக்கும் சமாஜ்வாதி கட்சிக்கு அடுத்த இடத்தில் அதிமுக உள்ளது.

டெல்லியில் இயங்கி வரும் ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு வெளியிட்டிருக்கும் அரசியல் கட்சிகளின் சொத்து விவரங்களில் இந்த தகவல் தெரியவந்திருக்கிறது.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள தேசிய, மாநில கட்சிகள் அனைத்தும் ஒவ்வொரு ஆண்டும் தங்களது சொத்து விவரம், வரவு-செலவு கணக்கு உள்ளிட்டவற்றை தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.

அதனடிப்படையில் கிடைத்திருக்கும் புள்ளி விவரங்களின்படி, உத்தர பிரதேசத்தில் செயல்பட்டுவரும் சமாஜ்வாதி கட்சியின் சொத்து மதிப்பு 2011-12ம் ஆண்டில் 212.86 கோடியாக இருந்தது. 2015-16ம் ஆண்டில் அந்த கட்சியின் சொத்து மதிப்பு 625 கோடி ரூபாய். 4 ஆண்டுகளில் அக்கட்சியின் சொத்து மதிப்பு சுமார் 198% அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் சமாஜ்வாதிக்கு அடுத்தபடியாக அதிக சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தை பிடிக்கும் பிராந்திய கட்சி அதிமுக. 2011-12ம் ஆண்டில், ரூ.88.21 கோடியாக இருந்த அதிமுகவின் சொத்து மதிப்பு, 155% உயர்ந்து 2015-16ம் ஆண்டில் ரூ.224.87 கோடியாக அதிகரித்துள்ளது. 

நாட்டிலேயே இரண்டாவது பணக்கார பிராந்திய கட்சியாக அதிமுக திகழ்கிறது.