நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு முன்னுரையாக அமையும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டு நீண்ட ஓய்வில் இருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இடைத்தேர்தலுக்காக மீண்டும் களமிறங்கியிருக்கிறார். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுவதற்காக வைகோ திருநெல்வேலி வந்தார். நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து வைகோ பிரசாரம் மேற்கொண்டார். வழக்கமான குரலில் அல்லாமல் மெல்லிய குரலிலேயே வைகோ பிரசாரம் மேற்கொண்டார்.


பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.  “ நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு முன்னுரையாக அமையும். இந்த இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் பிரசாரம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை எனச் சொல்லி பிற மாநிலத்தவரை தமிழகத்தில் நுழைக்கும் செயலை இந்த அரசு செய்துவருகிறது. தமிழக மின்சார வாரியம், ரயில்வே துறை போன்ற வேலை வாய்ப்பில் வெளிமாநிலத்தவரே அதிகம் இடம்பெற்றுவருகிறார்கள்.
இந்த அரசின் மீது மக்கள் கொதித்து போயிருக்கிறார்கள். அதை இடைத்தேர்தலில் காட்டுவார்கள். இந்த இடைத்தேர்தல்களில் கிடைக்கும் வெற்றி வருகிற சட்டப்பேரவை தேர்தலின் வெற்றிக்கு முகவுரையாக அமையும்” என வைகோ தெரிவித்தார். இதற்கிடையே நாங்குநேரியில் வைகோவை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, வசந்தகுமார் எம்.பி., பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் சந்தித்து இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.