admk general body meeting wil be held on 12th september

பல்வேறு அரசியல் திருப்பங்களையடுத்து பரபரப்பான சூழ்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் கூடவுள்ளது. 2300 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ள நிலையில், எத்தனைபேர் வருவார்கள் ? தினகரன் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்வார்களா ? போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையிலான அணிகள் இணைந்ததை அடுத்து, கட்சியின் பொதுக்குழுவைக் கூட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக இரண்டாயிரத்து 300 பொதுக்குழு உறுப்பினர்கள், 750-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் என சுமார் மூவாயிரம் பேருக்கு முறையாக அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டத்தில், இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவது, துணை பொதுச்செயலாளரை டிடிவி தினகரனை நியமித்தது செல்லாது என்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்களுடன் கூடிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்று தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ள டிடிவி தினகரன், மீறி பங்கேற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

இதனிடையே, பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்படுவது விதிமீறல் என்று கூறி தொடரப்பட்ட வழக்கிலும், கூட்டத்துக்கு தடை விதிக்கவும் உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

இந்நிலையில், சென்னை – வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் பொதுக்குழுக் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்து தயார் நிலையில் உள்ளன.

திருமண மண்டபத்தின் முகப்பு, உள் அரங்கம் உள்ளிட்ட பகுதிகள் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. வழியெங்கும் ஏராளமான பேனர்களும் கட்டப்பட்டுள்ளன.

பொதுக்குழுக் கூட்டத்தை முன்னிட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களின் விவரங்கள் அனைத்தும் போலீசாரிடம் வழங்கப்பட்டுள்ளன. அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே உள்ளே நுழையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.