இன்று பிற்பகலுக்கு மேல் வாட்ஸ் அப்பில் ஒரு போட்டோ வைரலாகிறது. அதன் உண்மைத்தன்மை எந்தளவுக்கு சரி என்று புரியவில்லை. ஆனால் ’வேலூரில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்த போது’ எனும் விளக்க வார்த்தைகளுடன் வலம் வரும் அந்த போட்டோவால் அ.தி.மு.க.வின் டோட்டல் மானமும் கப்பலேறி போய்க் கொண்டிருக்கிறது காவிரி விவகாரத்தில். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விடுத்த காலக்கெடு முடிந்த பின்னரும் அது அமைக்கப்படவில்லை. இதற்காக மத்திய அரசை தாறுமாறாக கண்டித்து கன்னாபின்னாவென கண்டன ஆர்பாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன தி.மு.க. தலைமையிலான எதிர்கட்சிகள். அவர்களின் விமர்சன தாக்குதலில் அநியாயத்துக்கு வறுபடுவது வாரியம் அமைக்காத மோடி அரசை விட, அதை தட்டிக் கேட்காத தமிழக அரசுதான். 

இந்நிலையில், எங்களுக்கும் காவிரி விஷயத்தில் அக்கறை இருக்கிறது என்பதை காட்டுவதற்காக இன்று தமிழகமெங்கு உண்ணாவிரத போராட்டத்தை நடத்துகிறது ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சென்னையில் எடப்பாடியார், பன்னீர்செல்வம், ஜெயக்குமார் ஆகியோர் உண்ணாவிரதத்தில் அமர்ந்திருக்க மற்ற மாவட்டங்களிலோ அம்மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் அமர்ந்தனர். 

இந்நிலையில் வேலூர் அ.தி.மு.க. உண்ணாவிரதம் என்ற பெயரில் போட்டோ ஒன்று மதியத்துக்கு மேல் வாட்ஸ் அப்பில் வைரலாகி உள்ளது. ஒரு பில்டிங்கின் பின்புறத்தில் அ.தி.மு.க. கரைவேஷ்டி கட்டி, பேட்ஜ் அணிந்த சிலர்  நின்றும், அமர்ந்து கொண்டும் கையில் தட்டுக்களை ஏந்தி சாப்பிடுகின்றனர். தட்டுக்களில் தக்காளி சாதம், தயிர் சாதம் ஆகியன வைக்கப்பட்டிருக்கின்றன. இது போக தரையில் பெரிய சைஸ் பாத்திரங்களிலும் அதே வெரைட்டி சாதங்கள் குவியலாக இருக்கின்றன. இது போக பெரிய சைஸ் வாட்டர் கேன்களும் அங்கே இருக்கின்றன. 

காவிரி நீரை பெறும் உரிமையை காட்டியும், வறட்சியில் வாடும் தமிழக மக்களுக்காக கண்ணீர் விட்டும் பசிக்கப் பசிக்க அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருப்பதை பப்பர பளிச்சென விளக்குகிறது அந்த போட்டோ. 

இந்த போட்டோ அங்குமிங்கும் சுற்றி, கடைசியில் அ.தி.மு.க.வினரிடையேயும் பரவ, ‘பார்றா, எந்த ஊருய்யா இது? புத்தியோட பொழைச்சிருக்கானுங்களே. நமக்கு இந்த யோசனை இல்லாம போச்சே! ஆஹா, நம்மள மாதிரியே இவனுங்களும் சைடுல பந்தி போட்டுட்டானுங்களே! அடப்பாவிங்களா திங்குறதுதான் திங்குறீங்க, சிக்கன் பிரியாணியா தின்னாதானேடா ஆளுங்கட்சிக்கு மதிப்பு.” என்றெல்லாம் கலவையாக ரியாக்‌ஷன் வர துவங்கியுள்ளன. 

ஆனால் இதைப் பார்த்த சீனியர் அ.தி.மு.க. நிர்வாகிகளோ, இந்த போட்டோவை எடுத்தது தி.மு.க.வினரின் வேலையா அல்லது நம்மாளுங்களின் உள்ளடி வேலையா? எதுவாக இருந்தாலும் கழக மானம் போச்சு. உண்மையில் இது இன்று உண்ணாவிரதத்தில் எடுக்கப்பட்டதா அல்லது எங்கோ ஒரு இடத்தில் எப்போதோ எடுத்ததை இப்படி கிளப்பி விடுகிறார்களா என்று விசாரியுங்கள்! என உத்தரவிட்டுள்ளனர்.