நடைபெற்ற முடிந்த ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பாலான மாவட்டங்களில் அதிக இடங்களை கைப்பற்றி இருக்கிறது. ஆளும் அதிமுக அரசிற்கு தேர்தல் முடிவுகள் சிறு பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் மொத்தமிருக்கும் 14 ஊராட்சிகளில் 12 ல் திமுக பெரும்பான்மை பெற்றுள்ளது.

அந்தநல்லூர், மணிகண்டம், திருவெறும்பூர், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூர், முசுரி, தொட்டியம், தாத்தையங்கார் பேட்டை, உப்புலியாபுரம் ஆகிய 12 ஊராட்சிகளிலும் பெரும்பான்மை இருப்பதால் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை திமுக எளிதாக கைப்பற்றும் நிலை இருக்கிறது. லால்குடி மற்றும் துறையூர் ஒன்றியங்களில் சுயேட்சைகள் ஆதரவை பெற மாவட்ட திமுக தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அதனால் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளையும் திமுக கைப்பற்றும் சூழல் ஏற்பட்டிருப்பதால் ஆளும் அதிமுகவிற்கு திருச்சி மாவட்டத்தில் படுதோல்வி ஏற்பட்டுள்ளது.

இங்கிருக்கும் அந்தநல்லூர் ஒன்றியத்தில் அதிமுக அனைத்து வார்டுகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இது ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குள் வரும் ஒன்றியமாகும். இங்கு தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்று முதல்வரானார். இங்கு தற்போது தமிழக அமைச்சர் வளர்மதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற தொகுதியிலேயே அதிமுக படுதோல்வியை சந்திருப்பது அக்கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.