தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித்தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் நேற்று மாறி மாறி முன்னிலை வகித்து வந்தது. விடிய விடிய வாக்கு எண்ணிக்கை நீடித்து வந்த நிலையில் தற்போது திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் ஒருதலை பட்ச அணுகுமுறையையும் மீறி திமுக அமோக வெற்றி பெற்றிருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் குடியுரிமை மசோதாவை அதிமுக ஆதரித்தது தான் தோல்விக்கு காரணம் என முன்னாள் எம்.பி அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அன்வர் ராஜாவின் மகன் மற்றும் மகள் இருவரும் போட்டியிட்டனர். வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியான நிலையில் இரண்டு பேரும் திமுக வேட்பாளர்களிடம் படுதோல்வியை சந்தித்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் அன்வர் ராஜா, உள்ளாட்சி தேர்தலில் சிறுபான்மை மக்கள் அதிமுகவிற்கு எதிராக வாக்களித்திருப்பதாகவும், குடியுரிமை திருத்த மசோதாவை ஆதரித்ததால் தோல்வி ஏற்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

தேசிய குடியுரிமை பதிவேடு நாடு முழுவதும் அமலாகும் என சிறுபான்மை மக்கள் அச்சப்படுவதாக கூறிய அவர், அசாமில் மட்டுமே அமல்படுத்துவோம் என பாஜக கூறியதால் தான் நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரித்தது என்றார். சிறுபான்மை சமூகத்தினர் அச்சப்படுவதால் அதிமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்யும் எனவும் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என கூறும் எனவும் தான் நம்புவதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுக மூத்த தலைவர் ஒருவரின் இந்த கருத்து கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.