முதல்வர் வேட்பாளர், வழிகாட்டுதல் குழு போன்ற கோரிக்கைகள் எழுந்துள்ள பரபரப்பான கட்டத்தில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் நாளை சென்னையில் நடைபெற உள்ளது. முதல்வரும் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீசெல்வமும் தங்கள் பலத்தைக் காட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் அதிமுகவின் அவசர உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த 19ம் தேதி நடந்தது. ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அக்கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக சூடான விவாதம் நடந்தது. முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவகாரத்தில் அமைச்சர்கள் கடந்த மாதம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் அமைச்சர்கள் குழு தனித்தனியாக ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. 19-ம் தேதி நடந்த அவசர கூட்டத்திலும் அமைச்சர் தங்கமணி தேர்தலுக்கு முன்பாக முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. 
இதேபோல கடந்த 2017-ம் ஆண்டில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைந்த பிறகு, வழிகாட்டு குழு அமைப்பது தொடர்பாகப் பேசப்பட்டது. அந்தக் குழுவை ஏன் அமைக்கவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் நேரடியாகவே கேள்வி கேட்டு அதிரடித்தார். ஆனால், அக்குழுவை அமைக்க எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாகப் பேசவில்லை. இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. 
முதல்வர் வேட்பாளர், வழிகாட்டுதல் குழு ஆகிய விவகாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் நாளை காலை 9.30 மணிக்கு அதிமுகவின் செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் 300 பேர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செயற்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு தங்கள் பலத்தைக் காட்டும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வதுக்கு பாஜகவின் ஆதரவு உண்டு என்பதால், பாஜக மூலமே பன்னீரை சரிகட்டும் முயற்சியில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

 
இதற்காக எடப்பாடியின் தீவிரமான ஆதரவு அமைச்சர்கள் இருவர் பாஜகவோடு பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதேபோல கட்சியின் வட மற்றும் தென் மாவட்ட நிர்வாகிகள் ஆதரவுடன், தங்கள் செல்வாக்கை நிறுவும் முயற்சியில் ஓபிஎஸ் தரப்பும் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. நாளை நடைபெற உள்ள செயற்குழு கூட்டத்தில் எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.