டிச.1 கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்… உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு!!
வரும் டிசம்பர் 1ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது.
வரும் டிசம்பர் 1ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் விரைவில் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதுகுறித்து விவாதிக்க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு அதிமுக தலைமை அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகராட்சி, பேருராட்சி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனு பெறுதல், அதிமுகவுக்கு புதிய அவைத்தலைவர் நியமனம், சசிகலாவின் அச்சுறுத்தல், அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம், உட்கட்சி தேர்தல் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை 11லிருந்து 18 ஆக விரிவுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,வழிகாட்டுதல் குழுவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அதிமுகவை வழிகாட்டுதல் குழுதான் நடத்த வேண்டும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் வரும் டிசம்பர் 1ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது.
இதுக்குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம் வருகின்ற 01.12.2021 புதன் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி K. பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் என்றும் கழக செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.