பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்து 3 முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் மைத்ரேயன். மாநிலங்களவைக்கு செல்ல மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், அது நடக்கவில்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் சென்னையில் போட்டியிடவும் விரும்பினார். ஆனால், சீட்டு கிடைக்கவில்லை. இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தனது விருப்பத்தை மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “21 ஆண்டுகளாகி விட்டது என்றால் நம்ப முடியவில்லை. இதே நாள் அன்று. 19/07/1999 அன்று மாலை 6.30 மணியளவில் அம்மாவின் தலைமையை ஏற்று , அம்மாவிடம் கழக உறுப்பினர் அட்டை வாங்கி கழகத்தில் இணைந்தேன். இன்று 21 ஆண்டுகள் நிறைவடைந்து 22 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். 1999 முதல் அம்மா தொடர்ந்து எனக்கு கழகத்திலும் தேர்தல் அரசியலிலும்  பெரிய அங்கீகாரம் கொடுத்து என்மீது அபரிமிதமாக பாசமழை பொழிந்தார்கள்.

 
2001 சட்டமன்ற தேர்தலில் அம்மாவின் ஆசி பெற்ற கழக வேட்பாளராக மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தேன். நீண்ட பல ஆண்டுகள் டெல்லியில் நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் தேசிய அரசியலிலும் அம்மா அவர்களின் குரலாக ஓங்கி ஒலித்து, சென்ற ஆண்டு 24/07/2019 அன்று டெல்லியிலிருந்து ஓய்வு பெற்றேன். 2001 ல் அம்மா அவர்கள் என்னை அடையாளப்படுத்திய தொகுதி மயிலாப்பூர். எனது ஒரே அடையாளம் நான் ஒரு அம்மா விசுவாசி.
 இன்று அம்மா இல்லாத சூழ்நிலையில் ஒரு திருப்புமுனை காலகட்டத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாநில அரசியலில் ஈடுபட ஆசை. வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம். அம்மாவின் ஆன்மா நிச்சயம் எனக்கு ஒரு நல்வழியைக் காட்டும் என்று உறுதியாக நம்புகிறேன். மற்றபடி கடவுள் சித்தம். கழகத்தில் 22ம் ஆண்டு எனக்கு நல்ல ஆண்டாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என்று மைத்ரேயன் பதிவிட்டுள்ளார்.
மயிலாப்பூர் தொகுதியை மனதில் வைத்துதான் டாக்டர் மைத்ரேயன் பதிவிட்டுள்ளது தெரிகிறது. ஏற்கனவே தொகுதியில் நடக்கும் நல்லது, கெட்டது என எல்லா நிகழ்ச்சிகளுக்கும் மைத்ரேயன் சென்றுவருகிறார். தொகுதியில் உள்ள அதிமுகவினரிடம் நேசம் காட்டிவருகிறார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், ‘அம்மா என்னை அடையாளப்படுத்திய தொகுதி மயிலாப்பூர்’ என்று தெரிவித்து பதிவிடுள்ளார். இந்த முறையாவது அவருடைய ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.