2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக அமைச்சரவையில் பள்ளிக்கல்வித் துறை, சட்டத்துறை, இளைஞர் நலன் உள்பட 7 துறைகளுக்கு அமைச்சராக இருந்தவர் சிவபதி. தற்போது எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநிலச் செயலாளராக இருந்துவருகிறார். முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த சிவபதி, தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஆசையில் உள்ளார். பெரம்பலூர் தொகுதி மீது கண் வைத்து காய் நகர்த்திவருகிறார்.

பெரம்பலூர் தொகுதியில் தொடர்ந்து தலைகாட்டிவரும் சிவபதி, பூத் கமிட்டி அமைப்பதில் ஆர்வம் காட்டிவருகிறார். தொகுதி முழுக்க வலம் வந்து, “பெரம்பலூர் தொகுதியில் இந்த முறை நான் தான் வேட்பாளர். கட்சித் தலைமையும் ஒ.கே. சொல்லியாச்சு” என்று தனது ஆதரவாளர்களிடன் கூறிவருகிறார். தொகுதிக்குள் இவர் காட்டும் வேகத்தைப் பார்த்து, இவரது ஆதரவாளர்களும் சிவபதிக்குதான் சீட்டு என்று அடித்துப்பேசுகிறார்கள். 

சிவபதியின் போக்கைப் பார்த்து தற்போது பெரம்பலூர் எம்.பி. மருதராஜா கடும் அதிருப்தியில் இருக்கிறாராம். ’யாரைக் கேட்டு இதைச் செய்கிறார், இதையெல்லாம் தலைமையும் கண்டுக்காமல் இருக்கிறதே’ என்று புலம்பிவருவதாகவும் கூறப்படுகிறது.

ஜெயலலிதா இருந்தபோது இப்படி யாராவது ஒருவர் தொகுதிக்கு சொந்தம் கொண்டாட முடியுமா என்று வழக்கம்போல் ‘உச்’ கொட்டுகிறார்கள் அதிமுக தொண்டர்கள்.