அதிமுக - தேமுதிக இடையே இன்று மாலை தொகுதி உடன்பாடு ஏற்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தேமுதிக சார்பில் இன்று மாலை அறிக்கை வெளியாகும் என்று விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கூட்டணியில் தேமுதிகவும் இடம் பெற பேச்சுவார்த்தை நடத்திவந்தது. ஆனால், பாமகவுக்கு ஒதுக்கிய அதே அளவுக்கு தங்களுக்கும் சீட்டுகள் ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக அடம் பிடித்ததால், கூட்டணியில் இழுபறி ஏற்பட்டது. இடையே திமுகவும் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க முயன்றதால், தேமுதிக சார்பில் அதிக சீட்டுகள் கேட்டு அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. கேட்ட சீட்டுகளை ஒதுக்கக்கோரி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் பலமுறை தேமுதிக சார்பில் பேச்சுவார்த்தை நடத்திவந்தது.
ஆனால், திமுக கூட்டணி திடீரென்று தேமுதிகவுக்கு கதவை அடைத்ததால், அதிமுகவை தவிர வேறு கூட்டணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அதிமுக சார்பில் சீட்டுகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக தகவல் வெளியாகின. இந்நிலையில் திமுகவுடனும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்த முயன்றதால், அரசியல் அரங்கில் அது பரப்பரப்பை ஏற்படுத்தியது. தேமுதிகவின் பேர அரசியல் கடும் விமர்சனத்துக்குள்ளானது. என்றாலும், தேமுதிக கூட்டணியில் இணைய இன்று வரை அதிமுக கெடு விதிருந்தது.
இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதிமுக வழங்கும் தொகுதிகளுக்கு தேமுதிக உடன்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  தற்போதைய நிலையில் 4 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை போரூரில் உள்ள ஹோட்டலில் இரு கட்சி நிர்வாகிகளும் சந்தித்து உடன்பாட்டில் கையெழுத்து இடுவார்கள் என்று அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதற்கிடையே, “இன்று மாலை தேமுதிக சார்பில் தேர்தல் தொடர்பான அறிக்கை வர உள்ளது” என்று விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், இதைத்தெரிவித்தார். மேலும் தொண்டர்கள் மத்தியில் விஜய பிரபாகரன் பேசும்போது, “கேப்டன் காட்டும் வழியில் செயல்பட்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக யார் என்பதை காட்ட வேண்டும். வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றியடைய உறுதியேற்க வேண்டும். இதுதான் நம் நோக்கமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.