அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக கழற்றிவிடப்பட உள்ளது என்று தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், விஜயகாந்த் பிறந்த நாள் மூலம் கூட்டணியில் பிளவு இல்லை என்பது உறுதியாகிவிட்டதாக தேமுதிக தலைமை மகிழ்ச்சியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் 68-வது பிறந்த நாளை தேமுதிகவினர் நேற்று கோலாகலமாகக் கொண்டாடினார்கள். கடந்த ஓராண்டுக்கு மேலாக உடல்நிலை பாதிப்பால் விஜயகாந்த் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை குறைத்துக்கொண்டுவிட்டார். இந்நிலையில் அவருடைய பிறந்த நாளை அக்கட்சியினர் வழக்கம்போல உற்சாகத்துடனும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடினார்கள். 
விஜயகாந்த் பிறந்த நாளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். பாஜக தலைவர் தமிழிசை, தாமக தலைவர் வாசன் என கூட்டணி கட்சியினர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ராமதாஸ் விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. அண்மையில் ராமதாஸ் முத்து விழாவை ராமதாஸ் கொண்டாடியபோது அவருக்கு விஜயகாந்த் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இரு கட்சிகளுக்குமான உறவில் சுமூகமான நிலை இல்லை.


அதே நேரத்தில் இந்த பிறந்த நாள் மூலம் அதிமுக கூட்டணியில் தேமுதிக இருப்பது உறுதியாகிவிட்டதாக அக்கட்சி தலைமை மகிழ்ச்சியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு போக்குக்காட்டி கடைசியில் தேமுதிக கூட்டணியில் சேர்ந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி தோல்வியடைந்தபோதும், தேமுதிகவால் அதிமுகவுக்கு எந்தப் பலனும் இல்லை என்ற கருத்து அதிமுகவில் பேசப்படுவதாக கூறப்பட்டது. ஒரு வேளை உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால், கூட்டணியிலிருந்து தேமுதிகவை அதிமுக கழற்றிவிடும் என்றும் தகவல்கள் வெளியாயின. இதை அதிமுக தலைமையும் மறுக்கவில்லை.
இந்நிலையில் விஜயகாந்தின் பிறந்த நாளுக்கு முதல்வரும், துணை முதல்வரும் வாழ்த்து தெரிவித்ததால், தேமுதிக - அதிமுக கூட்டணியில் பிளவு இல்லை என்பதை உறுதியாகிவிட்டதாக தேமுதிக முகாமில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தேமுதிகவை அதிமுக கழற்றிவிடப்போகிறது என்று பேசப்பட்டுவந்த நிலையில், அதிமுகவின் தலைமை வாழ்த்து தெரிவித்ததை தேமுதிக தலைமைக்கு உற்சாகத்தைக் கொடுத்திருப்பதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
இதற்கிடையே தேமுதிகவின் 15-ம் ஆண்டு விழாவையொட்டி திருப்பூரில் செப்டம்பர் 15 அன்று தேமுதிக சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. நீண்ட நாளுக்கு பிறகு இந்த விழாவில் விஜயகாந்த் பங்கேற்பதால், தேமுதிகவினரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.