மாணவி வழக்கை CBI-க்கு மாற்றுங்க.. விடியா அரசு உஷாரா இருந்திருந்தா பிரச்சனையே வந்திருக்காது.. ஜெயக்குமார்.
மாணவி மரண வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும் அதிமுக கழக அமைப்புச் செயலாளருமான ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
மாணவி மரண வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும் அதிமுக கழக அமைப்புச் செயலாளருமான ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-
கள்ளக்குறிச்சி கணியாமூர் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அம் மாணவியின் குடும்பத்தினர் சரியான நேர்மையான உடற்கூறு ஆய்வு நடவடிக்கை மற்றும் உள்ளூர் காவல்துறை மீதான சந்தேகத்தினால் சிபிசிஐடி காவல் விசாரணை ஆகிய கோரிக்கைகளை வைத்தனர், மேலும் தங்களது மகளின் இறப்புக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பதாகும்,
கேளாக் காதினராய் இந்த முதலமைச்சரும் அவர் வசம் உள்ள காவல் துறையினரும் கல்வி துறையினரும், ஏதோ ஒரு இனம்புரியாத காரணத்திற்காக கைகட்டி வாய்பொத்தி மௌனம் காத்தார்கள். வெகுண்டெழுந்த பொதுமக்கள் கடந்த 4, 5 நாட்களாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போராட்டம் நடத்தி வந்தனர். கலவரத்தை அடக்க முடியாமல் இந்த அரசின் காவல்துறை கையறுநிலையில் விழி பிதுங்கி நின்றது. உளவுத்துறை சரியான தகவல் சேகரித்து காவல்துறைக்கும் அரசுக்கும் தகவல் கொடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருந்தால், கலவரத்தை தடுத்திருக்க முடியும்,
கள்ளக்குறிச்சி பற்றி எரியும் இந்த அசாதாரண சூழ்நிலை குறித்து கவலைப்படாமலும், பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு ஆறுதல் கூறாமலும், மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்று கூறிக் கொள்ளும் ஏ.வா வேலு இந்த கலவரத்தை ஆரம்பத்திலேயே தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தார். உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் கலவரத்தை ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாம், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டிய பின்னர் தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போல் அமைச்சர் ஏவா வேலு அவர்கள் எங்களது கழக இடைக்கால பொதுச் செயலாளர் அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்கள் மீது பாய்ந்து பிராண்டி இருக்கிறார்.
அதிமுக உட்கட்சி பிரச்சினையை திசை திருப்ப கள்ளக்குறிச்சி விவகாரத்தை கையில் எடுத்து இருப்பதாக ஏ.வா வேலு திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார். முறையாக செயல்படும் எங்கள் இயக்கத்தில் ஒரு சில துரோகிகளுக்கு தோள் கொடுத்து தூண்டிவிட்டு குழப்பம் விளைவிப்பது திமுக அரசுதான் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். அடுத்தவர் பிரச்சினையில் எவ்வித கூச்சமும் இல்லாமல் தலையிட்டு, குழப்பம் விளைவிக்கும் இந்த விடிய அரசு கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கோட்டைவிட்டு தடுமாறி வருவதை நாடே அறியும். உட்கட்சி பிரச்சினையில் எடப்பாடியார் அவர்கள் குழம்பிப்போய் இருப்பதாக கூறியிருக்கிறார் ஏ.வா வேலு, எந்த நிலையிலும் எங்களுக்கு குழம்பும் பழக்கமோ, அடுத்தவர்களை குழப்பும் பழக்கமும் இல்லை. அதற்கு சொந்தக்காரர்கள் திமுகவினர் தான் என்பதை நாட்டு மக்கள் தெளிவாக அறிவர்.
50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன, அதோடு பள்ளிக்குள் நுழைந்து வகுப்பறையில் உள்ள பொருட்களை சூறையாடியுள்ளனர். மேலும் அந்த பள்ளியில் படிக்கும் சுமார் 3 ஆயிரத்து 800 மாணவ மாணவிகளின் சான்றிதழ்கள் அடியோடு எரிந்து சாம்பலாகி உள்ளன,இதற்கு யார் பொறுப்பு, பாதிக்கப்பட்டுள்ள மாணவ செல்வங்களுக்கு யார் பதில் அளிப்பது. அதற்கு உரிய நிவாரணம் என்ன? அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எவ்வாறு தொடர்ந்து கல்வி கற்பார்கள் என்பதையும் இந்த அரசு விளக்க வேண்டும்,
மாணவியின் மரணத்தை வைத்து நாங்கள் அரசியல் செய்வதாக ஏவா வேலு கூறுகிறார். இது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.நீட் தேர்வு விவகாரத்தில் அனிதா தற்கொலை செய்து கொண்டபோது அந்த மரணத்தை வைத்து அரசியல் செய்து ஆட்சிக்கு வந்ததுதான் இந்த திமுக. மேலும் அப்போது திமுக தலைவர் அவர்கள் இது அரசியல் செய்யாமல் அறிவியலா செய்வார்கள் எனவே எக்காளமிட்டதை ஏ.வா வேலு வசதியாக மறந்துவிட்டார். தற்போது தங்களுக்கு ஒன்று என்றவுடன் கதறித் துடிக்கிறார்கள்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அப்படி இல்லாமல் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணப்பட வேண்டும், மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழவேண்டும் என்ற தூய எண்ணம் கொண்டு பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுகிறார். இந்த விடியா அரசு எதிர்க்கட்சிகளை நசுக்கப் பார்க்கிறது. எதிர்க்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மீது பொய்வழக்கு போடுவதில் முனைப்பு காட்டுகிறது, இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
விடியா அரசின் முதல் அமைச்சர் அவர்கள் இதைத் தவிர்த்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க முனைப்பு காட்ட வேண்டும். தற்போது இந்த வழக்கு தமிழக காவல்துறையின் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது, பள்ளி மாணவி ஸ்ரீமதி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது, அந்த அப்பாவி மாணவி எப்படி இறந்தார் என்றும், அதற்கு காரணமானவர்கள் யார் என்பதையும் சட்டப்படி விசாரணை நடத்தி கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
அதே சமயத்தில் இச்சம்பவத்தை சாதகமாக்கிக் கொண்டு மிகப்பெரிய கலவரத்தை தூண்டிவிட்டவர்களும் அதற்கு உறுதுணையாக இருந்தவர்களையும், சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றமே இந்த விசாரணையை தன்னுடைய நேரடி கண்காணிப்பில் எடுத்துக் கொள்ளும் என்று கூறி உள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக் கொள்வதுடன், இந்த வழக்கை திமுக அரசு சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.